2 ஆயிரம் சதுரஅடி உள்ள கட்டிடம் கட்ட கலெக்டர் தலைமையிலான குழுமத்திடம் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் இல்லை

* கள அலுவலர்களே அனுமதி தரலாம்

* தமிழக அரசு உத்தரவு

சென்னை: 2 ஆயிரம் சதுர அடி வரையிலான கட்டிடங்களுக்கான அனுமதிக்கு கலெக்டர் தலைமையிலான குழுமத்திடம் ஒப்புதல் பெற அவசியம் இல்லை. மாறாக கள அலுவலர்களே அனுமதி தரலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து வீட்டு வசதித்துறை முதன்மை செயலாளர் ராஜேஷ் லக்கானி நகர்ஊரமைப்பு இயக்குனருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு ஒருங்கிணைந்த கட்டிட மற்றும் வளர்ச்சி விதிகள் 2019ன் படி மனை மற்றும் கட்டிட ஒப்புதல் வழங்குவது தொழில்நுட்பம் சார்ந்தவை என்பதால் 2 ஆயிரம் சதுர அடி வரையிலான குறைந்த உயர கட்டிடங்களுக்கும் மற்றும் 10 ஹெக்டேர் வரையிலான மனை பிரிவுகளுக்கும் நடைமுறையில் உள்ள அதிகாரப்பகிர்வு ஆணையின் படி நகர் ஊரமைப்பு இயக்குனர் முன் ஒப்புதலை பெற வேண்டியவற்றிற்கு அவ்வாறான ஒப்புதல் பெறப்பட்ட பின்னர் உறுப்பினர் செயலாளரான நகர் ஊரமைப்பு துறையில் உதவி இயக்குனர், துணை இயக்குனர், இணை இயக்குனர், மாவட்ட ஆட்சியர் நடத்தும் குழும கூட்டத்தில் வைக்காமல் தொழில்நுட்ப அலுவலராக உள்ளூர் திட்டக் குழுமத்தின் உறுப்பினர் செயலாளர் ஒப்புதல் வழங்கலாம்.

நேரடியாக அனுமதி வழங்கலாம்.  அவ்வாறு உறுப்பினர் செயலாளர் வழங்கிய அனைத்து திட்ட அனுமதி விவரங்களை பின்னர் வரும் திட்டக் குழும கூட்டத்தில் மாவட்ட கலெக்டருக்கு தகவலாக தெரிவிக்கப்பட வேண்டும்.  மேலும், தற்போதைய அதிகார பகிர்வின் படி நகர் ஊரமைப்பு இயக்குனரின் முன் ஒப்புதலை பெறுவதற்கான நடைமுறையில் உள்ள உத்தரவுகளை உறுப்பினர் செயலாளர் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். இந்த வகையில் திட்ட அனுமதி வழங்குவதில் நடைமுறையை மாற்றம் செய்வதற்கு திட்டக்குழுமத்தில் உரிய தீர்மானமும் இயற்றப்படவேண்டும். மேலும், இது தொடர்பாக நகர் ஊரமைப்பு இயக்குனர், கள அலுவலர்களுக்கு தகுந்தவாறு அறிவுறுத்தல்களை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: