பல இடங்களில் சேதமடைந்த கால்வாய் சீரமைக்க ஒதுக்கிய கிருஷ்ணா நீர் கால்வாய் பராமரிப்பு நிதி ‘மாயம்’

* மண் சரிவு, உடைப்பால் நீர் கடத்தும் திறன் பாதிப்பு

* 2000 கன அடி திறந்தால் 700 கன அடி மட்டுமே கிடைக்கும்  

* கண்டலேறு அணை நீர் முழுமையாக கிடைப்பதில்லை

* குடிநீர் சிக்கலை எதிர்கொள்ளும் நிலையில் சென்னை

கிருஷ்ணா நீர் கால்வாய் பல இடங்களில் சேதமடைந்துள்ளதால், அதன் நீர் கடத்தும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆந்திர அரசுடன் போராடி கண்டலேறு அணையில் இருந்து சென்னை குடிநீர் தேவைக்காக தண்ணீர் பெற்றாலும் அது அணையில் இருந்து முழுமையாக ெசன்னைக்கு வருவதில்லை. 2000 கன அடி திறந்தால் 700 கன அடி மட்டுமே தமிழக எல்லையை தொடுகிறது. இதற்கு கால்வாய் பராமரிப்பில் அலட்சியம் காட்டுவது தான் காரணம் என மக்களிடம் இருந்து குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை மாநகரின் குடிநீர் பற்றாக்குறையை கவனத்தில் கொண்டு ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா மாநில அரசுகள் 1976 ஏப்ரல் 14ம் தேதி தங்களின் பங்குகளுக்கு 5 டிஎம்சி கிருஷ்ணா நீர் வழங்க ஒப்புக் கொண்டது. அதன்படி ஆண்டுக்கு 15 டிஎம்சி தமிழகத்துக்கு கிடைக்க வழி வகை செய்யப்பட்டன. இதை தொடர்ந்து கடந்த 1977 அக்டோபர் 27ம் தேதி மத்திய அரசின் சார்பில் நடந்த கூட்டத்தில் கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, ஆந்திர அரசு நீர்வளப்பிரிவு அதிகாரிகள் கலந்து கொண்டு ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 1ம் தேதி முதல்  சைலம் அணையில் இருந்து 15 டிஎம்சி நீர் தர ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இதில், 3 டிஎம்சி நீர் ஆவியாதல் போக 12 டிஎம்சி நீர் இரண்டு தவணைகளாக தமிழகத்துக்கு வழங்க வேண்டும்.

அதன்படி ஜூலை 1ம் தேதி முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி, ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி வழங்க தீர்மானிக்கப்பட்டன. இதை தொடர்ந்து கடந்த 1983ம் ஆண்டு கிருஷ்ணா நதி நீர் பங்கீடு திட்டத்தை வகுக்கப்பட்டது. அதன்பேரில், நெல்லூர் அருகே உள்ள கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 177 கி.மீ தூரம் வரை கால்வாய் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இந்த கால்வாய் ஆந்திரா எல்லையில் 152 கிலோ மீட்டர், தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை தாமரைகுப்பம் ஜீரோ பாயிண்ட்டில் இருந்து பூண்டி ஏரி வரை 25 கி.மீ வரை அமைக்க திட்டமிடப்பட்டன.  இதையடுத்து கடந்த 1984ம் ஆண்டு கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கப்பட்டு 1995ம் ஆண்டு முடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து 1996ம் ஆண்டு முதல் முதன்முதலாக கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு தண்ணீர் திறக்கப்பட்டன. ஆரம்பத்தில் இந்த திட்டத்தின் மூலம் 0.5 டிஎம்சி மட்டுமே பெற முடிந்தது. இதற்கு, தண்ணீர் கொண்டு வர கால்வாய் அமைக்காததே முக்கிய காரணமாக இருந்தது. இதனால், இந்த திட்டம் ஏமாற்றம் அளிக்க கூடியதாக இருந்தது.

இந்த நிலையில், கண்டலேறு அணையில் இருந்து 15 டிஎம்சி நீர் அனுப்பப்பட்டப் போதிலும் கடந்த 1996ம் முதல் 2002ம் ஆண்டு வரை சென்ைனக்கு உரிய நீர் கிடைக்கவில்லை. அரை டிஎம்சி  நீர் அளவு மட்டுமே கிடைத்தது. இதையடுத்து கடந்த 2002ம் ஆண்டு கால்வாய் கரைகளை பலப்படுத்தி மறு சீரமைப்பு பணிக்காக ரூ.200 கோடி வரை சத்யசாய்பாபா நிதியுதவி அளித்தார். அதன்பிறகு கால்வாய் மறுகட்டமைப்பு செய்யப்பட்டது. குறிப்பாக, கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரி வரை 65 கி.மீ நீள கால்வாயின் பக்கவாட்டு சுவர்கள் உறுதியான கான்கீரிட் கலவைகளால் பலப்படுத்தப்பட்டது. மேலும், தண்ணீர் பூமியில் உறிஞ்சுவதை தடுக்க வெளிநாட்டில் இருந்து பாலி எதிலின் நார்வகைகளை பயன்படுத்தி சர்வதேச தரத்தில் சீரமைக்கப்பட்டன. இப்பணி 2004ம் ஆண்டு முடிந்த நிலையில், அந்தாண்டு நவம்பர் 24ம் தேதி கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டன. அப்போது தண்ணீர் தங்கு தடையின்றி தமிழக எல்லைக்கு வந்து சேர்ந்தது. இதன் மூலம் 3.7 டிஎம்சி அளவு நீர் பெறப்பட்டன. இந்த நிலையில் 2013ல் ஆந்திரா எல்லையில் உள்ள கிருஷ்ணா நீர் கால்வாய் பகுதிகளில் புனரமைப்பு பணி மேற்கொண்டன. ஆனால், அதன்பிறகு இந்த கால்வாயில் முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை. இதனால், கிருஷ்ணா கால்வாயில் பல இடங்களில் சேதமடைந்தது.

குறிப்பாக, கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்ட் வரை உள்ள 152 கி.மீட்டர் கால்வாயின் கரைகளில் பொருத்தப்பட்ட சிமெண்ட் சிலாப்கள் ஆங்காங்கே பெயர்ந்து சரிந்துள்ளது. தமிழகத்தில் உள்ள கிருஷ்ணா கால்வாய்களில் பாரமரிப்பு பணி மேற்கொள்ள ஆண்டுக்கு ரூ.60 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த நிதியை முறையாக பயன்படுத்துவதில்லை. தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜீரோ பாயிண்டில் இருந்து பூண்டி நீர்த்தேக்கத்துக்கு தண்ணீர் வரும் 25 கி.மீட்டர் கால்வாய் மோசமான நிலையில் உள்ளது.  இதற்கிடையே கடந்த 2014ல் கிருஷ்ணா கால்வாய் ரூ.20 கோடி செலவில் புனரமைக்கப்பட்டன. ஆனால், இந்த நிதியை கொண்டு முறையாக புனரமைப்பு பணி மேற்கொள்ளப்படாததால் கடந்த 2015 பெய்த மழையிலேயே கால்வாய் கடுமையாக சேதமடைந்தது. இதனால், கால்வாயின் நீர் கடத்தும் திறன் கடுமையாக பாதிக்கப்பட்டன.

இதனால், கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லைக்கு 800 கன அடி நீர் வந்தால் கூட பூண்டி ஏரிக்கு 550 கன அடி நீர் கூட வருவதில்லை. அதே போன்று கண்டலேறு  அணையில் 2000 கன அடி திறந்தால் கூட வெறும் 700 கன அடி தமிழக எல்லைக்கு வருவதே சிரமமாக உள்ளது. இதனால், கண்டலேறு அணையில் திறக்கப்படும் நீர் தற்போது வரை முழுமையாக பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திட்டத்தை ஆரம்பத்தில் கொண்டுவர முயன்றது தமிழகத்தின் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் மற்றும் ஆந்திரா முதல்வராக இருந்த என்டிஆர் ஆகியோர்தான். அதன்பின்னர்தான் திமுக தலைவர் கருணாநிதி, முதல்வரான பிறகு, சத்தியா சாய்பாபா, நிதி வழங்கியதன்மூலம் இந்த திட்டம் கொண்டு வரப்பட்டது. கருணாநிதி முதல்வராக இருந்தவரை இந்த திட்டத்தில் சிறப்பு கவனம் செலுத்தினார். இதனால் அடிக்கடி மராமத்து பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் கடந்த 9 ஆண்டுகளாக கிருஷ்ணா கால்வாய் திட்டத்தை யாரும் கொண்டு கொள்ளாமல் கிடப்பில் போடப்பட்டு விட்டது. இதனால் எம்ஜிஆர் கொண்டு வர நினைத்த திட்டத்தையாவது அதிமுகவினர் செய்திருக்க வேண்டும். அதை கண்டுகொள்ளாமல் விட்டது அதிர்ச்சி அளிப்பதாக அதிமுகவினரே வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.

Related Stories: