கல்குவாரி குத்தகை காலம் நீட்டிப்பு: தமிழக அரசு உத்தரவு

சென்னை: கல்குவாரிகளின் குத்தகை காலம் 5 ஆண்டில் இருந்து 10 ஆண்டுகளாக நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில்  கல்குவாரிகளுக்கு கனிம வளத்துறை மூலம் குத்தகை அனுமதி கொடுக்கப்படுகிறது.  தற்போது வரை மாநிலம் முழுவதும் 1200 கல்குவாரிகள் உள்ளது. இக்குவாரிகளுக்கு  கனிம வளத்துறை மூலம் 5 ஆண்டுக்கு ஒரு முறை குத்தகை விடப்படுகிறது. இந்த குவாரிகளை குத்தகைக்கு எடுக்கும் நிறுவனங்களில், வெட்டி எடுப்பதில்  ஏற்படும் காலதாமதம் காரணமாக, அரசு அனுமதித்த அளவு கூட எடுக்க முடியாத நிலை  ஏற்படுவதாக கூறப்படுகிறது. குறிப்பாக, குவாரிகளை குத்தைக்கு எடுத்த தொகையை  கூட அந்த ஒப்பந்த நிறுவனங்களால் எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது.  இதனால், குத்தகைக்கு எடுத்த நிறுவனம் பெரும் இழப்பை சந்திப்பதாக  கூறப்படுகிறது.

சில நேரங்களில் இழப்பை ஈடுகட்ட குத்தகை எடுத்த ஒரு சில  நிறுவனங்கள் குத்தகை காலம் முடிந்தும் சட்ட விரோதமாக எடுப்பதாக  குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில் காஞ்சிபுரத்தை சேர்ந்த  கல்குவாரி ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் சார்பில் கல் குவாரிகளை குத்தகை  காலத்தை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தது.  இதையேற்று கல்குவாரி குத்தகை காலத்தை 5 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளுக்கு நீட்டித்து தொழில்துறை செயலாளர் முருகானந்தம் உத்தரவிட்டுள்ளார். அதில், புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டா நிலங்களில் கல் குவாரி குத்தகை காலம் 5  ஆண்டாக இருந்தது. தற்போது அது 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டுள்ளது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: