தமிழக பொதுப்பணித்துறை இணையதளத்தில் டெண்டர் படிவத்தை வெளியிடாமல் அடாவடி: அதிகாரிகள் மீது கான்ட்ராக்டர்கள் குற்றச்சாட்டு

சென்னை: பொதுப்பணித்துறையில் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு டெண்டர் தருவதற்காக இணையதளத்தில் டெண்டர் படிவத்தை வெளியிடாமல் அடாவடி செய்திருப்பதாக கான்ட்ராக்டர்கள், அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தி உள்ளனர்.

தமிழக பொதுப்பணித்துறையில் அவசர கால பணிகளை தவிர்த்து, அதாவது, ₹5 லட்சத்துக்குள் உள்ள பணிகளை தவிர மற்ற பணிகளுக்கு டெண்டர் விட்டால் பத்திரிகைகளில் விளம்பரம் தர வேண்டும். அதே போன்று, பத்திரிகைகளில் டெண்டர் அறிவிப்பு வெளியான ஓரிரு நாட்களில் அந்த டெண்டர் குறித்த விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும். ஆனால், பொதுப்பணித்துறையில் டெண்டர் அறிவிப்பு வெளியிட்ட உடனே இணையதளத்தில் படிவத்தை அப்லோட் செய்வதில்லை. மாறாக, டெண்டர் திறக்கும் தேதி நெருக்கத்தில் தான் இணையதளத்தில் வெளியிடப்படுகிறது. இதனால், ஒரு சிலர் மட்டுமே டெண்டரில் கலந்து கொள்ள முடிகிறது. பலருக்கு டெண்டர் குறித்த தகவல் இல்லாததால் அவர்களால் கலந்து கொள்ள முடிவதில்லை. சில நேரங்களில் டெண்டர் படிவம் இணையதளத்தில் வெளியிடப்படுவதில்லை என்றும் புகார் எழுந்துள்ளது.

குறிப்பாக, சைதாப்பேட்டையில் தகவல் ஆணையத்திற்கு புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்திற்கு தெற்கு பகுதியில் ₹54 லட்சம் செலவில் நுழைவு வாயில் அமைப்பதற்கு கடந்த செப்.4ம் தேதி டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த டெண்டருக்கு செப்டம்பர் 15ம் தேதிக்குள் விண்ணபிக்க வேண்டும் என்று காலக்கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த டெண்டர் படிவம் இணையதளத்தில் வெளியிடப்படவில்லை. இதனால், டெண்டருக்கு யாரும் விண்ணப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், இந்த டெண்டருக்கு ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்யப்பட்டதாக தெரிகிறது. இது, ஒப்பந்ததாரர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், ஒரு குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டுமே ஒப்பந்தம் தருவதற்காக இது போன்ற வேலையில் அதிகாரிகள் ஈடுபடுவதாக  தமிழ்நாடு பொதுப்பணித்துறை ஒப்பந்ததாரர்கள் நலச்சங்கம் புகார் தெரிவித்துள்ளது.

Related Stories: