தூத்துக்குடியில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் செயல்படும் ரேஷன்கடை: சாலையோரம் அமர்ந்து பொருட்கள் விநியோகம்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் பாதுகாப்பற்ற வகையில் ரேஷன்கடை இயங்குவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். ஊழியர்கள் வேறு வழியின்றி சாலையோரம் அமர்ந்து பொருட்களை விநியோகித்து வருகின்றனர்.தூத்துக்குடி தெப்பக்குளம் அருகேயுள்ள டி.ஆர் நாயுடு தெருவில் அரசின் பொதுவிநியோக திட்ட ரேஷன் கடை இயங்கி வருகிறது. தனியாருக்கு சொந்தமான இடத்தில் இந்த ரேஷன் கடை இயங்கி வருவதாக தெரிகிறது.கூட்டுறவுத்துறை வழியாக அனைத்து ஊர்களிலும் மக்களின் எண்ணிக்கைக்கேற்ப ரேஷன் கடைகள் அமைந்துள்ளது. இக்கடைகளின் மூலமாக மக்களின் அத்தியாவசியத் தேவையான அரிசி, சர்க்கரை, மண்ணெண்ணெய், கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் மற்றும் பலசரக்குப் பொருள் குறைந்த விலையில் வழங்கப்படுகிறது.

தமிழகத்தில் பல ரேஷன்கடைகள் வாடகை கட்டிடங்களில் இயங்குகின்றன. இவற்றில் பல கடைகள் பாதுகாப்பற்ற வகையிலும், பொதுமக்கள் காத்திருக்க எவ்வித வசதிகளும் இல்லாத, மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதியிலுமே அமைந்துள்ளன. தூத்துக்குடி தெப்பக்குளம் அருகேயுள்ள டி.ஆர் நாயுடு தெருவில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ரேஷன் கடை இயங்கி வருகிறது. மிகவும் பழமையான இக்கட்டிடம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் இடிந்து விழுந்தது. அப்போது அதிர்ஷ்டவசமாக அங்கு யாரும் இல்லாததால் எவ்வித உயிர் சேதமும் இல்லை. இந்த கட்டிடத்தின் பெரும் பகுதி இடிந்து விழுந்து விட்ட நிலையில் அங்கு மீதமுள்ள ஒரு அறையில் பாதுகாப்பற்ற முறையில் ரேஷன் பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

இதனால் பொருட்களின் பாதுகாப்பிற்கு உத்திரவாதம் இல்லாத நிலை உள்ளது. அங்கு பணியில் உள்ள விற்பனையாளர் மற்றும் எடையாளர் ஆகியோர் வேறு வழியின்றி பயோமெட்ரிக் மெஷினை அருகேயுள்ள காலி இடத்தில் திறந்த வெளியில் வைத்தே பயன்படுத்தி பொதுமக்களுக்கு ரேஷன் பொருட்களை வழங்கி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் ஏற்கனவே கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளனர். பொதுமக்கள் ரேஷன் பொருட்களை அச்சமின்றி வாங்கிச் செல்ல ேதவையான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் உடனே எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: