2,131 கோடியில் நடைபெறும் பணிகளை கண்காணிக்க மதிப்பீடு, கண்காணிப்புக்குழு 3 ஆண்டுக்கு பிறகு நியமனம்: தமிழக அரசின் நடவடிக்கையால் பெரும் சர்ச்சை

சென்னை: 2,131 கோடி செலவில் நடைபெறும் பணிகளை கண்காணிக்க 3 ஆண்டுகளுக்கு பிறகு மதிப்பீடு மற்றும் கண்காணிப்பு குழு நியமனம் செய்யப்பட்டு இருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பாசன உட்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில் தமிழ்நாடு பாசன வேளாண்மை நவீனப்படுத்துதல் திட்டம் கடந்த 2017ல் கொண்டு வரப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் 66 உப வடிநிலங்களில் 5.43 லட்சம் எக்டேர் பாசன பரப்பு பயன்பெறும் வகையில் 2,962 கோடி செலவில் இந்த திட்டம் செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி 2131 கோடி செலவில் 4778 ஏரிகள் மற்றும் 477 அணைக்கட்டுகளை புனரமைத்தல், ஏரியின் நீர் பரப்பு பகுதியில் செயற்கை முறை நீர் செறிவூட்டும் கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.

முதற்கட்டமாக, 18 உப வடிநிலங்களில் 1325 ஏரிகள் மற்றும் 107 அணைகட்டுகள் புனரமைத்தல், 45 செயற்கை முறை நீர் செறிவூட்டம் கிணறுகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து, இரண்டாவது கட்டமாக 649.55 கோடி செலவில் 16 உப வடிநிலங்களில் 906 ஏரிகள் மற்றும் 183 அணைகள் ஆகியவற்றை புனரமைக்கவும், 37 செயற்கை முறை நீர்ச்செறிவூட்டும் கிணறுகள் அமைக்க கடந்தாண்டு நவம்பர் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் 75 % பணிகள் முடிவடைந்துள்ளன. இந்நிலையில், அடுத்தகட்டமாக 300 கோடி மதிப்பிலான பணிகளுக்கான விரிவான அறிக்கை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்கிடையே, இப்பணிகளை கண்காணிக்க மதிப்பீட்டு மற்றும் கண்காணிப்பு குழு அமைக்க வேண்டும் என்று உலக வங்கி கடந்த 2017ல் உத்தரவிட்டது. ஆனால், கடந்த 2018ல் இக்குழு அமைக்க டெண்டர் விடப்பட்டது.

ஆனால், டெண்டர் எடுக்க ஒப்பந்த நிறுவனம் 16 கோடி செலவில் நிர்ணயம் செய்தது. இதனால், பொதுப்பணித்துறை சார்பில் ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்யவில்லை. இதைத்தொடர்ந்து, டெண்டர் எடுக்காமலேயே ஒப்பந்த நிறுவனம் தேர்வு செய்ய பொதுப்பணித்துறை அரசு செயலாளர் மணிவாசன் தலைமையில் 4 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இந்த குழுவில் கடந்த 2019ம் தேதி அண்ணா பல்கலைக்கழகத்தை நியமிக்க முடிவு செய்தது.  தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் மதிப்பீட்டு மற்றும் கண்காணிப்பு குழுவுக்கு தேர்வு செய்யப்பட்டதாக உலக வங்கிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த குழுவுக்கு உலக வங்கி ஒப்புதல் அளித்தது. இந்நிலையில் தற்போது இக்குழு நியமனத்துக்காக 11 கோடி நிதி ஒதுக்கீடு செய்து பொதுப்பணித்துறை அரசு செயலாளர் மணிவாசன் உத்தரவிட்டுள்ளார்.

இந்த குழுதான் பொதுப்பணித்துறை சார்பில் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்யும். புனரமைப்பு பணி முறையாக நடக்கிறதா, புனரமைப்புக்காக தேர்வு செய்யப்பட்ட ஏரி சரிதானா, இந்த ஏரிக்கு நிதி ஒதுக்கீடு செய்தது சரிதானா என்பது குறித்து ஆய்வு செய்து அந்த குழு பரிந்துரை செய்ய வேண்டும். ஆனால், தற்போது பெரும்பாலான பணிகள் முடிந்த நிலையில், தற்போது தான் இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இக்குழு தற்போது நியமிக்கப்பட்டிருப்பது வீண் என்றும், இதனால், அரசுக்கு தேவையற்ற செலவு என்றும் பொறியாளர்கள் சிலர் தெரிவித்துள்ளனர்.

Related Stories: