ரவுடி சங்கரின் உடலை மறுபிரேத பரிசோதனை கோரிய மனு தள்ளுபடி: ஐகோர்ட் உத்தரவு

சென்னை: ரவுடி சங்கர் என்கவுன்டர் தொடர்பாக சிபிசிஐடி அல்லது சிபிஐ விசாரிக்கக் கோரியும், மறு பிரேத பரிசோதனை செய்யக்கோரியும் சங்கரின் தாயார் கோவிந்தம்மாள் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் எழும்பூர் மாஜிஸ்திரேட் அறிக்கையும், சிபிசிஐடி விசாரணையின் இடைக்கால அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.  இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல் சங்கரசுப்பு, ஆய்வாளர் நடராஜனின் விசாரணை அறிக்கை சினிமா கதைபோல புனையப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையை பார்க்கும்போது, தற்காப்புக்காக சுட்டதாக தெரியவில்லை. திட்டமிட்ட படுகொலையை செய்துள்ளனர் என்று வாதிட்டார். இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அரசு தரப்பில் மாநில தலைமை குற்றவியல் வக்கீல் ஏ.நடராஜன் ஆஜராகி, ரவுடி சங்கர் மீது 53 வழக்குகள் உள்ளன. 9 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் அடைக்கப்பட்டுள்ளார். சம்பவத்தன்று போலீசாரை கத்தியால் ெவட்டியுள்ளார். இதையடுத்து, போலீசார் சங்கரை சுட்டுள்ளனர். துப்பாக்கி சூட்டில் இறந்த அவரது உடல் அதன் பிறகு கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உரிய வழிகாட்டுதல்கள் பின்பற்றப்பட்டு 2 மருத்துவர்களால் மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.  பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவு செய்யப்பட்டுள்ளது. சங்கர் கொல்லப்பட்ட வழக்கு சிபிசிஐடிக்கு ஏற்கனவே மாற்றம் செய்யப்பட்டுள்ளது  என்று வாதிட்டார். இதையடுத்து, சங்கரின் உடலை மறு பிரேத பரிசோதனை கோரிய மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

Related Stories: