நேரடி விதைப்பு செய்து ஒரு மாதம் ஆனநிலையில் தண்ணீரின்றி கருகும் சம்பா நெல் பயிர்கள்- விவசாயிகள் வேதனை

அறந்தாங்கி : அறந்தாங்கி பகுதியில் நேரடி நெல் விதைப்பு செய்து ஒரு மாதம் ஆனநிலையில் போதுமான மழை பெய்யாததாலும், காவிரியில் போதுமான தண்ணீர் வராததால், சம்பா நெல் பயிர்கள் கருக தொடங்கி உள்ளதால் விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகி உள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி, ஆலங்குடி, கறம்பக்குடி வட்டங்களின் ஒருபகுதியில் காவிரி நீர் பாசனம் நடைபெற்று வருகிறது.

இதில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி வட்டங்களில் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் இந்த ஆண்டு நேரடி நெல் விதைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த சாகுபடி ஆண்டின் தொடக்கத்தில் மேட்டூர் அணையில் முழு கொள்ளளவு தண்ணீர் இருந்ததால், மேட்டூர்அணை திறக்கப்பட்டு, அறந்தாங்கி பகுதிக்கு தண்ணீர் வந்து கொண்டு உள்ளது. இந்த நிலையில் கடந்த மாதம் பெய்த மழையை பயன்படுத்தி அறந்தாங்கி, ஆவுடையார்கோவில் மற்றும் மணமேல்குடி பகுதி விவசாயிகள் தங்கள் நிலங்களில் நேரடி நெல்விதைப்பு மூலம் சாகுபடியை தொடங்கினர்.

நேரடி நெல்விதைப்பு செய்யப்பட்ட சில நாட்களில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இந்த மழையின் காரணமாக நெற்பயிர்கள் முளைத்தன. வயலில் இருந்த ஈரப்பதம் காரணமாக பயிர்கள் நன்கு செழித்து வளர்ந்தன. இந்நிலையில் கடந்த சில வாரங்களாக காவிரிப்பாசன பகுதிகளில் போதுமான மழை பெய்யாததால், ஒரு சில பகுதிகளில் பயிர்கள் கருக தொடங்கிவிட்டன. காவிரியில் அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி பகுதியில் உள்ள ஏரிகளுக்கு போதுமான தண்ணீர் வந்து சேராததால், ஏரிகள் இன்னும் 10 சதவீத தண்ணீர் இருப்பை கூட எட்டவில்லை. ஏரிகளில் இருந்தும் பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியவில்லை.

இதனால் மணமேல்குடி பகுதியில் தினையாகுடி, கம்பர்கோவில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பயிர்கள் கருகத் தொடங்கி உள்ளன.

காவிரி பாசனப்பகுதிகளில் போதிய மழை இல்லாததால், பயிர்கள் கருகி வருவதை தடுக்க தமிழக அரசு அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், மணமேல்குடி பகுதிக்கு கூடுதலாக காவிரி தண்ணீரை வழங்கி பயிர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: