நோயாளிகள் சரமாரி குற்றச்சாட்டு ஸ்கேன் சென்டர்களில் கொள்ளை வசூல்-அதிகாரிகள் ஆய்வு செய்ய வலியுறுத்தல்

சேலம் : தமிழகத்தில் ஸ்கேன் சென்டரில் நோயாளிகளிடம் அதிகப்படியான கட்டணம் வசூலிப்பதாகவும், இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும் என்றும் உறவினர்கள் வலியுறுத்தியுள்ளனர்.நடுத்தரவாசிகள் அதிகம் இருக்கும் நம்நாட்டில் முழுமையான மருத்துவம், கல்வி, வேலைவாய்ப்பு, உணவுப்பற்றாக்குறை உள்பட பல்வேறு குறைபாடுகள் உள்ளன. மருத்துவமும், கல்வியும் தனியாருக்கு தாரை வார்க்கப்பட்டதால் இந்த துறைகள் மீதான சர்ச்சைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இதில் சுகாதாரத்துறையை பொறுத்தவரை அரசு மருத்துவமனைகளை விட, தனியார் மருத்துவமனைகளே அதிகளவில் உள்ளது. இந்த தனியார் மருத்துமனைகளில் பணியாற்றுவோரில்  60 சதவீதம் பேர் அரசு மருத்துவர்கள். இவர்கள் அரசு சம்பளத்தை வாங்கிக்கொண்டு தனியார் மருத்துவமனைகளிலும் பணியாற்றி வருகின்றனர். சிலர் சொந்தமாக மருத்துவமனைகள் நடத்தியும் வருகின்றனர். இதனால் மருத்துவம் சார்ந்து அரசு வழங்கும் பல்வேறு சலுகைகளும் தனியார் மருத்துவமனைகளுக்கு அதிகளவில் சென்று விடுகிறது.

இது ஒருபுறமிருக்க சமீபகாலமாக தனியார் ஸ்கேன் சென்டர்கள் இஷ்டத்திற்கு கட்டணம் வசூலிக்கும் கொள்ளை மையங்களாக மாறி வருவதாக சர்ச்சை எழுந்துள்ளது. தனியார் மருத்துவமனை நிர்வாகங்களும், தனியார் ஸ்கேன் சென்டர்களும் ஒன்றாக கைக்கோர்த்து நோயாளிகளிடம் பகல் கொள்ளையடித்து வருவமதாக குற்றம் சுமத்துகின்றனர். மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகளை பரிசோதனை செய்யும் டாக்டர்கள், நோயாளிகளிடம் முதலில் ரத்தம், சிறுநீர் பரிசோதனை எடுக்கச் சொல்கின்றனர். இதன்பின்னர் சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ ஸ்கேன் உள்ளிட்டவைகளை எடுக்கச் சொல்கின்றனர். டாக்டர்கள் பரிந்துரை செய்யும் ஸ்கேன் சென்டர்களில்தான் நோயாளிகள் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்பது இதில் எழுதப்படாத விதியாக உள்ளது. தற்போது கொரோனா பீதியால் அனைத்து தரப்பு மக்களும் இக்கட்டான வாழ்க்கை சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இந்த நேரத்தில் ஸ்கேன் சென்டர்கள் காட்டும் கெடுபிடியும், கட்டணக் கொள்ளையும் பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது என்கின்றனர் நோயாளிகள்.

இது குறித்து  நோயாளிகளின் உறவினர்கள் கூறியதாவது: தனியார் மருத்துவமனைக்கு சென்றால், அங்கு ஏராளமான பரிசோதனைகள் செய்து, பின்னர் ஸ்கேன் எடுக்கச் சொல்கின்றனர். அப்போது ஆரம்பத்திலேயே சி.டி.ஸ்கேன் மற்றும் எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க வேண்டும். அதிலில் தான் துல்லியமாக நோய் எப்படி தாக்கியுள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியும் என்று கூறுகின்றனர்.

இதில் ஒவ்வொரு ஸ்கேனுக்கும் ஸ்கேன் சென்டர்களில் ஒரு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த ஸ்கேன் சென்டர்களில் அவர்கள் நிர்ணயிப்பது தான் கட்டணம். எந்தெந்த நோய்க்கு  ஸ்கேன் எடுக்க என்ன கட்டணம் என்ற விபரம் எந்த சென்டரிலும் இருப்பதில்லை. இதனால் கேட்கும் கட்டணத்தை கொடுத்து ஸ்கேன் எடுக்கிறோம். எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்க குறைந்தபட்சம் ₹3,750 லிருந்து ₹20 ஆயிரம் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

இப்படி தாறுமாறாக கட்டணம் வசூலிக்கும் ஸ்கேன் சென்டர்களில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும். நோயாளிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பது உறுதியானால் உடனடியாக சம்பந்தப்பட்ட ஸ்கேன் சென்டர்களுக்கு சீல் வைக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

அரசு ஸ்கேன் சென்டர்கள் கொள்ளையை தடுக்கும்  

மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைகளில் மட்டுமே ஸ்கேன் சென்டர் உள்ளது. அங்கு தினசரி நூற்றுக்கணக்கானோர் ஸ்கேன் எடுக்க காத்திருக்கின்றனர். அரசு மருத்துவமனையில் ஒருவர் ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றால் ஐந்து நாட்கள் காத்திருக்க வேண்டும். காலதாமதம் ஏற்படுவதால் பலர் தனியார் ஸ்கேன் சென்டரை நாடிச்செல்கின்றனர். இதனால் அங்கு அவர்கள், கேட்கும் கட்டணத்தை கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. எனவே அரசே குறைந்த கட்டணத்தில் ஸ்கேன் சென்டர்களை மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் நிறுவ வேண்டும். இது  தனியார் ஸ்கேன் சென்டர்கள் நியாயமான கட்டணம் வசூலிக்க வழிவகுக்கும் என்பதும் நோயாளிகளின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: