பேரவையில் குட்கா எடுத்து சென்ற விவகாரம்: 18 திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை குழுவின் நோட்டீசுக்கு இடைக்கால தடை

சென்னை ஐகோர்ட் உத்தரவு

பேரவைக்குள் குட்கா பாக்கெட்டுகளை கொண்டுவருவதற்கு பேரவைத் தலைவரின் அனுமதி பெற வேண்டும் என்று பேரவைத் தலைவர் தனிப்பட்ட முறையில் முடிவு செய்ய முடியாது. இது குறித்து உரிமை குழுவில்தான் முடிவு செய்ய முடியும். இந்த நோட்டீசும் தவறுகளுடன் அனுப்பப்பட்டுள்ளன.

சென்னை: சட்டப்பேரவைக்குள் குட்கா பொருள்களை எடுத்து சென்ற விவகாரத்தில் உரிமை குழு  அனுப்பிய நோட்டீசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் நேற்று இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. தமிழகத்ததில் தடை செய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்டப் புகையிலைபொருட்கள் கடைகளில் தாராளமாக கிடைக்கிறது என்ற குற்றச்சாட்டை நிரூபிக்கும் வகையில் கடந்த 2017ல் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அவற்றை சட்டப்பேரவைக்குள் கொண்டு சென்று காண்பித்தனர். இதையடுத்து, எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட 21 திமுக எம்.எல்.ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க சட்டப் பேரவை உரிமை குழுவுக்கு சபாநாயகர் உத்தரவிட்டார்.

அதை எதிர்த்து மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார்ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, பேரவை உரிமை குழுவின் நோட்டீசை ரத்து செய்து உத்தரவிட்டனர். இந்த நிலையில் கடந்த 7ம் தேதி துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் கூடிய உரிமை குழு தி.மு.க., எம்எல்ஏக்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியது. இந்த நோட்டீசை எதிர்த்து எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட 18 தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, திமுக சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் சண்முகசுந்தரம் வாதிடும்போது, ‘‘கடந்த 2017ம் ஆண்டு குட்கா பொருட்களை மு.க.ஸ்டாலின் காட்டி தடை செய்யப்பட்ட பொருள் விற்கப்படுவதை வெளிப்படுத்தினார் என்றார். மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ வாதிடும்போது, ‘‘தடையை அமல்படுத்த வேண்டும் என்று தான் அதை சபையில் காட்டியதாக தலைமை நீதிபதி உத்தரவில் தெரிவிக்கப்பட்டது. இதில் எந்த உள்நோக்கம் இல்லை’’ என்றார்.  இதையடுத்து, இந்த வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி, வழக்கு நேற்று இந்த வழக்கில் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா இடைக்கால உத்தரவை வழங்கினார்.

உத்தரவில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு பான்மசாலா, குட்கா போன்ற புகையிலைப் பொருட்களுக்கு தடை விதித்து கடந்த 2017 மே 23ல் அரசிதழில் வெளியிட்டது. அதில் குட்கா பொருட்களை தயாரிப்பது, சேமித்துவைப்பது, விற்பனை செய்வது ஆகியவற்றுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த சட்டத்தை அரசு உரிய முறையில் அமல்படுத்தவில்லை என்றும் கடைகளில் குட்கா பொருட்கள் தாராளமாக கிடைக்கிறது என்பதையும் சுட்டிக்காட்டவே மனுதாரர்கள் பேரவைக்குள் குட்கா பாக்கெட்டுகளையும், அது தொடர்பான புகைப்படங்களையும் கொண்டு சென்றுள்ளனர்.

எனவே, தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை பேரவைக்குள் கொண்டு சென்றது சட்ட விரோதம் என்று கூற முடியாது. அதன் அடிப்படையில் மனுதாரர்களுக்கு உரிமைக்குழு உரிமை மீறல் நடவடிக்கைக்கான நோட்டீஸ் அனுப்பியுள்ளதை ஏற்க முடியாது என்று தலைமை நீதிபதி அமர்வு தெளிவுபடுத்தியுள்ளது. இந்த வழக்கை முதல் அமர்வு விரிவாக விசாரித்து தீர்ப்பளித்துள்ள நிலையில், குட்கா பொருட்களை பேரவைக்குள் கொண்டு வர பேரவைத் தலைவரின் அனுமதி பெற வேண்டும் என்ற குற்றச்சாட்டுடன் விளக்கம் கேட்டு மனுதாரர்களுக்கு புதிதாக நோட்டீஸ் அனுப்பப்பட்டதை ஏற்க முடியாது.

பேரவைக்குள் குட்கா பாக்கெட்டுகளை கொண்டுவருவதற்கு பேரவைத் தலைவரின் அனுமதி பெற வேண்டும் என்று பேரவைத் தலைவர் தனிப்பட்ட முறையில் முடிவு செய்ய முடியாது. இது குறித்து உரிமை குழுவில்தான் முடிவு செய்ய முடியும். இந்த நோட்டீசும் தவறுகளுடன் அனுப்பப்பட்டுள்ளன. மனுதாரர்களுக்கு விளக்கம் கேட்டு உரிமைக் குழு மீண்டும் அனுப்பிய நோட்டீசை தடை விதிக்க கோருவதற்கு போதுமான முகாந்திரம் உள்ளது. எனவே, இந்த நோட்டீசுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது இந்த வழக்கில் பேரவை தலைவர், பேரவை செயலாளர், உரிமைக்குழு தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பதில் தர உத்தரவிடப்படுகிறது என்று தெரிவித்து விசாரணையை அக்டோபர் 28ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

Related Stories: