சமூக வலைதளங்கள் மூலம் சுபாஷ் பண்ணையார் கொலை மிரட்டல்: அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ எஸ்.பியிடம் புகார்

தூத்துக்குடி: சமூக வலைதளங்கள் மூலம் சுபாஷ் பண்ணையார்  கொலை மிரட்டல் விடுத்துள்ளதால், உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும், பாதுகாப்பு கேட்டும் திருச்செந்தூர் தொகுதி திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன், தூத்துக்குடி எஸ்பியிடம் புகார் மனு அளித்துள்ளார். எஸ்பி ஜெயக்குமாரிடம் அவர் அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:  திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினராக கடந்த 2001 முதல் இருந்து வருகிறேன். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளராகவும் செயல்பட்டு வருகிறேன். தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில் உள்ள சொக்கன்குடியிருப்பை சேர்ந்த செல்வன் என்பவர் படுகொலை தொடர்பாக எதிரிகள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணையில் உள்ளது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட செல்வன் குடும்பத்தாருக்கு நியாயமும், நிவாரணமும் கிடைக்க எனது தலைமையிலும், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக  சார்பிலும் கடந்த 20ம் ேததி இரவு 10 மணியில் இருந்து போராட்டம் நடந்தது.

மாவட்ட கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகிய இருவரும் மறுநாள் நண்பகல் 1 மணிக்கு போராட்டம் நடந்த இடத்திற்கு வந்து உரிய நிவாரணமும், உரிய சட்ட நடவடிக்கையையும் விரைவாக எடுக்கப்படும் என்று தெரிவித்ததால் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இந்நிலையில் எனது தண்டுபத்து வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரை பனங்காட்டு மக்கள் கழகத்தை சேர்ந்த சிலர்  அடித்து உடைத்துள்ளனர். அதன் பேரில் மெஞ்ஞானபுரம் காவல் நிலையத்தில் வழக்கு பதிந்து விசாரணை நடக்கிறது. மேலும் நேற்று சமூக வலைதளங்களில் மூலக்கரையை சேர்ந்த அசுபதி மகன் சுபாஷ் என்னை மிரட்டும் வகையில் பேசியுள்ளார். கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில் பேசியுள்ள அவர் மீது நடவடிக்கை எடுப்பதுடன், எனது உயிருக்கும், உடமைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிட்டுள்ளார்.

Related Stories: