புதிதாக 5,325 பேருக்கு கொரோனா தமிழகத்தில் உயிரிழப்பு 9 ஆயிரத்தை தாண்டியது: 5 லட்சம் பேர் குணமடைந்தனர்

சென்னை: தமிழகத்தில் புதிதாக 5,325 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைச் சேர்த்து மொத்த பாதிப்பு 5.57 லட்சமாக உயர்ந்துள்ளது. இதில் 5 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்தை தாண்டியுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு தொடர்பாக சுகாராத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 84,979 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளது. இதில் 5,325 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னையில் 980 பேர், செங்கல்பட்டில் 297 பேர், திருவள்ளூரில் 218 பேர், காஞ்சிபுரத்தில் 205 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதைச் சேர்த்து தமிழகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 57 ஆயிரத்து 999 ஆக உயர்ந்துள்ளது. நேற்று பாதிக்கப்பட்டவர்களில் 3,282 பேர் ஆண்கள். 2,043 பேர் பெண்கள். தற்போது வரை 3 லட்சத்து 36 ஆயிரத்து 469 ஆண்கள், 2 லட்சத்து 21 ஆயிரத்து 500 பேர் பெண்கள், 30 திருநங்கைகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 5,363 பேர் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 5 லட்சத்து 2 ஆயிரத்து 740 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 46 ஆயிரத்து 249 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

நேற்று மட்டும் 63 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதில் தனியார் மருத்துவமனையில் 27 பேரும், அரசு மருத்துவமனையில் 36 பேரும் அடங்குவர். சென்னையில்-8, சேலம்-9, திருவள்ளூர்-7, கடலூர், தஞ்சாவூர் -5, கோவை, திருப்பூர்-4, ராமநாதபுரம்-3, நீலகிரி, தேனி, திருவண்ணாமலை-2, செங்கல்பட்டு, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், புதுக்கோட்டை, தென்காசி, திருப்பத்தூர், திருநெல்வேலி, விழுப்புரம் தலா ஒருவர் என்று மொத்தம் 63 பேர் மரணமடைந்துள்ளனர். இதில் 4 பேர் எந்தவித இணை நோய்களும் இல்லாமல், கொரோனாவால் பாதிக்கப்பட்டு மட்டும் மரணமடைந்துள்ளனர். 59 பேர் இணைநோய்களுடன் கொரோனா உறுதி செய்யப்பட்டு மரணமடைந்துள்ளனர். ஒட்டுமொத்தமாக தமிழகத்தில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 9 ஆயிரத்து 10 ஆக உயர்ந்துள்ளது.

* சென்னையில் உயிரிழப்பு 10க்கு கீழ் குறைந்தது

சென்னையில் கடந்த சில மாதங்களாக தினசரி 10 முதல் 20 உயிரிழப்புகள் பதிவாகி வந்தது. இந்நிலையில் நேற்று 8 பேர் மட்டும் மரணமடைந்துள்ளனர். இதன்படி பல நாட்கள் கழித்து சென்னையில் உயிரிழப்பு எண்ணிக்கை ஒன்றை இலக்கத்தில் பதிவாகியுள்ளது.

Related Stories: