இந்திய கலாச்சாரங்கள் குறித்து ஆய்வு செய்யும் குழுவில் தமிழக நிபுணர்களையும் சேர்க்க வேண்டும்: பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி கோரிக்கை

சென்னை: இந்தியாவின் கலாச்சாரங்களை ஆய்வு செய்யும் நிபுணர் குழுவில் தமிழகத்தை சேர்ந்த கலாச்சார ஆய்வு நிபுணர்களையும் சேர்க்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார். இது குறித்து பிரதமருக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் உலக கலாச்சாரத்தில் அதன் தாக்கம் ஆகியவை குறித்து ஆய்வு செய்வதற்காக மத்திய கலாச்சார அமைச்சகம் ஒரு நிபுணர் குழுவை அமைத்துள்ளதாக அறிகிறேன். உலக கலாச்சாரத்தின் அஸ்திவாரம் இந்தியாவில் உள்ள பல்வேறு கலாச்சரங்கங்கள்தான் என்பதை ஆழமாக ஆய்வு செய்ய முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது.

ஆனால், அந்த நிபுணர் குழுவில் தென்னிந்தியாவை சேர்ந்த குறிப்பாக உலகின் மிகப் பழமையான கலாச்சாரமான திராவிட கலாச்சாரத்தை கொண்டுள்ள தமிழகத்தை சேர்ந்த பிரதிநிதிகள் ஒருவரும் சேர்க்கப்படவில்லை என்பதையும் அறிகிறேன்.

தமிழகத்தில் உள்ள கீழடி மற்றும் பல்வேறு இடங்களில் நடந்துவரும் அகழ்வாராய்ச்சிகள் சங்க காலத்தில் அதாவது 6ம் நூற்றாண்டுக்கு முன்பிருந்த கலாச்சாரங்களின் முன்னோடி தமிழக கலாச்சாரம் என்பதை பறைசாற்றி வருகின்றன. தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும் உலகின் மிக பழமையான கலாச்சாரங்களின் ஒன்றாகும் என்பதை இந்த ஆராய்ச்சிகள் வெளிக்கொண்டுவந்துள்ளன. கடந்த ஆண்டு நீங்கள் மகாபலிபுரத்துக்கு வந்தபோது தமிழக கலாச்சாரத்தையும் அதன் உன்னதத்தையும் மிகவும் ரசித்து பார்த்ததை நினைவுபடுத்த விரும்புகிறேன். தமிழ் மொழியும், தமிழ் கலாச்சாரமும் இல்லாமல் இந்திய வரலாறு மற்றும் கலாச்சாரமும் முழுமை பெறாது. இந்த நிலையில் இந்திய கலாச்சாரங்களை ஆய்வு செய்யும் குழுவில் தமிழகத்தை சேர்ந்த நிபுணர்களை சேர்க்காதது அதிர்ச்சியளிக்கிறது. எனவே, இந்த விஷயத்தில் தாங்கள் தலையிட்டு தமிழக கலாச்சார ஆய்வு நிபுணர்கள் உள்ளடக்கிய குழுவை புதிதாக அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: