காவல்துறை விழிப்புணர்வு முகாம் குழந்தைகளின் செல்போனை சோதனை செய்ய வேண்டும்: பெற்றோர்களுக்கு டிஐஜி அறிவுறுத்தல்

திருவள்ளூர்: குழந்தைகள் பயன்படுத்தும் செல்போனை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும் என பெற்றோர்களுக்கு டிஐஜி சமுண்டீஸ்வரி அறிவுறுத்தினார். திருவள்ளூர் அருகே தனியார் கல்லூரியில் மாவட்ட காவல்துறை சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து விழிப்புணர்வு முகாம் நடந்தது. ஏஎஸ்பி மீனாட்சி தலைமை வகித்தார். காஞ்சிபுரம் சரக டிஐஜி சாமூண்டீஸ்வரி கலந்து கொண்டு பேசியதாவது.

இன்றைய காலகட்டத்தில் பெண்களும், குழந்தைகளும் விழிப்புணர்வுடன் இருந்தால் குற்றங்கள் வெகுவாக குறைக்கப்படும். பாலியல் தொல்லை தரும் குற்றவாளிகளிடம் இருந்து குழந்தைகளை நாம்தான் பாதுகாக்க வேண்டும். பாதுகாப்பற்ற தொடுதல் குறித்தும் புரிய வைக்க வேண்டும்.

தற்போது ஆன்லைன் வகுப்புகள் நடப்பதால், குழந்தைகள் என்ன படிக்கிறார்கள். யாருடன் பேசுகிறார்கள் என்பதை நன்றாக கவனிக்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்கள் நடந்தால், உடனடியாக அருகில் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முன்வரவேண்டும்.

10 முதல் 18 வயது வரை உள்ள ஆண், பெண் குழந்தைகள் பயன்படுத்தும் செல்போனை அடிக்கடி சோதனை செய்ய வேண்டும். பெற்றோர்கள், பிள்ளைகளை தனியாக விடக்கூடாது. வயது வந்த பிள்ளைகள் நண்பர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். வாட்ஸ்அப், பேஸ்புக் ஆகியவற்றில் புகைப்படத்தை விடுவதை தவிர்க்க, அவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்றார்.

Related Stories: