திருட்டு மணலில் வீடு கட்டும் மலைக்கோட்டை காக்கி அதிகாரி பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

‘‘ஆட்சி பீடத்துக்கு அருகில் இருந்தும் காக்கிகள் மனவேதனையோடு இருக்காங்களாமே, உண்மையா...’’ என்றார் பீட்டர் மாமா.

‘‘ சென்னை, கோட்டை வளாகத்தில்  தமிழக அரசின் தலைமை செயலக அலுவலகம் உள்ளது. முதல்வர், அமைச்சர்கள், ஐஏஎஸ் அதிகாரிகளின்  அலுவலகங்கள் இங்கு செயல்படுவதால் 24 மணி நேரமும் பலத்த பாதுகாப்பு இருக்கும். இதற்காக தலைமை செயலக காவலர்கள் என்ற தனி பிரிவே இருக்கு. அதிகார மையமே அங்கு இருந்தும் எங்களுக்கு ஒரு பயனும் இல்லை. தமிழகத்தின் குமரி முனையில் உள்ள காக்கிகளின் நிலையை விட எங்கள் நிலை மோசமாக இருப்பதாக காக்கிகள் புலம்பறாங்க. இரவு பணியில் இருக்கும் காவலர்களுக்கு இங்கு  மின்விசிறி வசதி உள்ளிட்ட அடிப்படை வசதியே கிடையாதாம். இதற்கு முன்பு இரவு பணிக்காக 8 மணிக்கு வந்தால் அதிகாலை 2 மணிக்கு டூட்டி முடிந்துவிடுமாம். ஆனால், கோட்டை பாதுகாப்புக்கு புதிதாக வந்துள்ள காக்கி அதிகாரி ஒருவர், இரவு 8 மணி டூ  காலை 8 மணி வரைனு மாத்திட்டாராம்... 12 மணிநேரம் எப்படி தொடர்ந்து பணியில் இருக்க முடியும்... குடிக்க டீ கூட கிடைக்காதாம்... இதனால தலைமை செயலக காக்கிகள்  மன உளைச்சலில் சிக்கி தவிக்கிறாங்களாம்... யாரிடம் சொல்வது குழம்பிபோய் இருக்காங்களாம்... அப்புறம்  ஆண்டுக்கு 2 முறை வழங்கப்படும் காக்கி உடைக்கான துணியும் கொடுக்கலையாம்... அது எங்கே போச்சுனே தெரியல என்று வேதனைப்படுகிறார்கள்... அப்புறம் கோட்டை காவல் பணிநேரமே தொடர வேண்டும் என்று  தலைமை செயலக காக்கிகள் மனவேதனையோடு கேட்கின்றனர்... அமைச்சர் போனாலும் உயரதிகாரியே பக்கத்தில் போனாலும் யாரிடமும் புகார்களை கொண்டு செல்ல முடியாது என்பதால மனசுக்குள் தவிக்கிறார்கள்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘திருட்டு மணலில் வீடு கட்டும் காக்கி அதிகாரி பற்றி சொல்லுங்களேன்...’ என்று வில்லங்க விஷயத்தை கேட்டார் பீட்டர் மாமா.

‘‘மலைக்கோட்டை மாநகரில் விஜபிக்கள் மற்றும் பக்தர்கள் அதிகமாக வந்து செல்லும் பகுதியில் உள்ள காவல்நிலையத்தில் உள்ள சட்டம், ஒழுங்கு காக்கி அதிகாரி ஒருவர் இருக்காரு. அவர் குமரியான மாவட்டத்தில் சொந்த வீடு ஒன்று கட்டி வருகிறாராம்... இதற்கான மணல் மலைக்கோட்டையில் இருந்து தான் சீக்ரெட்டாக சப்ளை ஆகுதாம். இதற்காக மணல் மாபியாவுடன் கூட்டணி வைத்து மலைக்கோட்டை மாநகரில் இருந்து 8 யூனிட் மணலை திம்மராயசமுத்திரம் பகுதியை சேர்ந்த திருட்டு மணல் வியாபாரியின் மகன் ஒருவர்தான் மிகவும் பாதுகாப்பாக கொண்டு போய் சேர்த்தாராம். இதற்கிடையில மணல் கொள்ளை குறித்து கோர்ட் கடும் உத்தரவிட்டதால அது தொடர்பான குற்றவாளிகளை கைது செய்ய மாநகர கமிஷனர் சமீபத்தில் சொன்னாராம்.  இதனை கண்டு கொள்ளாமல் சொந்த வீடு கட்டுவதற்காக மணலை அந்த காக்கி அதிகாரியே கொண்டு சென்றாராம்... இது குறித்து ரகசிய தகவலின் பேரில் திருட்டு மணல் வியாபாரியை கமிஷனரின் தனிப்படை சமீபத்தில் கைது செய்து சிறையில் தள்ளிட்டாங்க.. அந்த வியாபாரி மீது குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்க கமிஷனர் பரிந்துரைத்தாராம். இதனால அதிர்ச்சி அடைந்த அந்த காக்கி அதிகாரி... கைதானவரின் உறவினரிடம் ரகசியமாக டீல் பேசி தன் பெயரை வராமல் பார்க்க முயற்சி செய்தாராம். அது பயனளிக்காததால அந்த காக்கி அதிகாரி நீண்ட விடுப்பில் எஸ்கேப் ஆகிட்டாராம். இது தெரிந்த சிறையில் இருக்கும் மணல் வியாபாரி கொதித்து போனாராம்.. கவனிக்க வேண்டியதை அந்த காக்கி அதிகாரிக்கு அவ்வப்போது கொடுத்து கவனித்துள்ளேன். போதாக்குறைக்கு வீடு கட்டுவதற்கு மணலும் கொடுத்துள்ளேன். என் மீதே குண்டர் சட்டமா... உண்மையை கோர்ட்டுல போட்டு உடைக்கிறேன்னு ஆவேசமாக பேசுகிறாராம்...’’ என்றார் விக்கியானந்தா.

‘‘நகரையே தூய்மையாக்கும் பணிக்கும் கரன்சி வாங்கிக் கொண்டு போஸ்டிங் போடுறது நியாயமா...’’ என்று வேதனையுடன் கேட்டார் பீட்டர் மாமா.

‘‘ கோவையில  சத்துணவு அமைப்பாளர் மற்றும் உதவியாளர் பணிக்கு புதிதாக ஆள் எடுக்கும் படலம் தொடங்கி இருக்காம். 150 போஸ்டிங் போடுவதற்கு 1,000க்கும் மேற்பட்டவர்கள் விண்ணப்பித்து இருக்காங்க. இதுல, இலை மக்கள் பிரதிநிதிகளின் தலையீடு அதிகமாக இருக்காம். தங்களுக்குள் ‘கோட்டா’’’’ ஒதுக்கி, வசூல் தட்டி எடுக்கின்றனர். ஒரு போஸ்டிங் போடுவதற்கு இரண்டு லட்சம் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரை வசூல் குவிக்கின்றனர். இவர்களில், பெண் கடவுள் பெயரை அடைமொழியாக ெகாண்ட ஒருவர் ‘டாப்’’ பில் உள்ளார். போஸ்டிங் போடுவதற்கு, கல்வித்தகுதி, விண்ணப்பம் பரிசீலனை எல்லாம் கிடையாது. ஒரே தகுதி கரன்சி நோட்டு மட்டும்தானாம்... அப்புறம் மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 530 பேர் நேரடியாக நியமனம் செய்ய இருக்காங்க. அதற்கான வேலைகளும் நடந்து வருகிறது. இந்த விவகாரத்திலும் இலையின் மக்கள் பிரதிநிதிகளின் தலையீடு அதிகமாக உள்ளது. எல்லா துறையிலும் இவர்கள் மூக்கை நுழைப்பதால் அதிகாரிகள், தங்கள் பங்கு பறிபோய்விடுகிறதே என குமுறுகின்றனர். அடுத்த எலக்‌ஷனுல நமக்கு சீட் தர்றாங்களோ, இல்லையோ... அப்படியே தந்தாலும் ஜெயிப்போமா., இல்லையோ... காற்றுள்ள போதே தூற்றிக்கொள்... என்ற பழமொழிக்கு ஏற்ப தட்டி எடுப்போம் என வரிந்து கட்டிக்கொண்டு களத்தில் இறங்கியுள்ளதால், கோவை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகத்தில் பெரும் சலசலப்பு உருவாகியுள்ளது... இருந்தாலும் தூய்மை பணியாளர்களிடம் பணத்தை வாங்கி இவர்கள் எங்கே நகரத்தையும்.. நிர்வாகத்தையும் சுத்தமாக வைத்திருக்க போறாங்க...’’ என்றார்

விக்கியானந்தா

Related Stories: