சின்னசேலம் ரயில் நிலையத்தில் ஆமை வேகத்தில் பிளாட்பாரம் மேற்கூரை அமைக்கும் பணி: ரயில் போக்குவரத்து துவங்குவதற்குள் முடிக்க கோரிக்கை

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சின்னசேலம் ரயில் நிலையம் மிக பெரிய, காற்றோட்டமுள்ள, இடவசதி உள்ள ரயில் நிலையமாகும். பெரிய நகரங்களில் இல்லாத வகையில் இங்கு சரக்கு இறங்குதளம் உள்ளது. இந்த ரயில் நிலையத்தை விரிவுபடுத்தி, எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளாகவே மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் சின்னசேலம் ரயில் நிலையத்தை விரிவுபடுத்தும் வகையில் ரூ.2 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கி பிளாட்பாரங்களுக்கு இடையே ரயில்வே மேம்பாலம் அமைத்தனர். மேலும் பிளாட்பாரங்களில் கற்கள் பதிக்கப்பட்டு அழகுபடுத்தி உள்ளனர்.

மேலும் இரண்டாவது பிளாட்பாரத்தில் மேற்கூரை, ரயில் நிலையத்தில் நகரை ஒட்டி உள்ள பகுதியில் சுற்றுச்சுவர் அமைத்தல் போன்ற பணிகள் நடந்து வருவதுடன், ரயில்பாதையை ஒட்டி இருபக்கமும் தரை தளம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் மிக்க மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆனால் ரயில் நிலையத்தின் நுழைவு வாயிலில் பிளாட்பாரம் அமைக்கும் பணி படுமந்தமாக நடந்து வருகிறது. இன்னும் பிளாட்பார மேற்கூரை அமைக்கும் பணி, பயணிகள் காத்திருக்க உட்கார சீட் அமைக்கும் பணி, குடிநீர் தொட்டி அமைக்கும் பணி ஆகியவை நடக்க வேண்டும். இந்த பணிகள் இன்னும் துவங்கவில்லை.

தற்போது ஊரடங்கால் ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில் மீண்டும் சென்னை போன்ற பெருநகரங்களில் ரயில் போக்குவரத்து துவங்கி உள்ளது. சின்னசேலம் வழியாகவும் சேலம், விருத்தாசலம், காரைக்கால், பெங்களூரு, மங்களூரு போன்ற ஊர்களுக்கு அடுத்த மாத துவக்கித்தில் துவங்க உள்ளதாக தெரிகிறது. ஆகையால் சின்னசேலம் வழியாக ரயில் போக்குவரத்து துவங்குவதற்குள் பிளாட்பாரத்தின் மேற்கூரை அமைக்கும் பணி, பயணிகள் ரயில் வரும்வரை காத்திருக்க உட்காருமிடம் ஆகிய பணிகளை உடனடியாக செய்து முடிக்க வேண்டும் என்று பயணிகள், சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Related Stories: