தமிழகத்தில் 2018-19ம் ஆண்டில் ரூ232.18 கோடி வீட்டுவரி வசூல்

தமிழகத்தில் கடந்த 2018-19ம் ஆண்டில் ரூ.232.18 கோடி வீட்டுவரியாக வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் தொழில்வரியாக ரூ.114.67 கோடியும், குடிநீர் கட்டணமாக ரூ.87.19 கோடியும் கிடைக்கப்பெற்றுள்ளது. தமிழ்நாட்டில் 79 ஆயிரத்து 394 குக்கிராமங்களை உள்ளடக்கிய 12 ஆயிரத்து 524 கிராம ஊராட்சிகள் உள்ளன. இங்கு, நிர்வாக பணிகளை மேற்கொள்வதற்காக ஊராட்சி செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அரசுக்கு வருவாய் தரும் இனங்களை வசூல் செய்து, அரசு கணக்கில் சேர்க்க வேண்டும். வீட்டு வரி, சொத்து வரி சம்பந்தப்பட்ட கிராம ஊராட்சியால் விதிக்கப்படுகிறது. இதேபோல் கிராம ஊராட்சிகள் தொழில் வரி விதிக்கும் அதிகாரம் பெற்றவை. தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டத்தின்படி தொழிலாளர்களின் ஊதியத்திலிருந்து தொழில் வரிக்காக பிடித்தம் செய்த தொகையினை தொடர்புடைய கிராம ஊராட்சிகளுக்கு செலுத்திட வேண்டும்.

இவற்றை வசூல் செய்து அரசு கணக்கில் செலுத்த வேண்டும். இதேபோல் குடிநீர்வரி, நூலக வரி போன்றவற்றையும் வசூல் செய்து, ஊராட்சியின் பொதுநிதி கணக்கில் சேர்க்க வேண்டும். அதனைக்கொண்டு அப்பகுதி மக்களுக்கு தேவையான குடிநீர், தெருவிளக்கு, சாக்கடை, சாலை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். முன்னதாக அரசு சம்பந்தப்பட்ட கிராமத்திற்கு தேவையான அடிப்படைக்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு என்ன மாதிரியான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என ஆய்வு செய்து வைத்திருக்கும். அந்தவகையில் கடந்த 2018-19ம் ஆண்டில் மட்டும் 232.18 கோடி ரூபாய் வீட்டு வரியாக வசூல் செய்யப்பட்டுள்ளது. இதேபோல் தொழில்வரியாக ரூ.114.67 கோடி, குடிநீர் கட்டணமாக ரூ.87.19 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: