திருப்போரூர் ஒன்றியம் படூர் ஊராட்சியில் மயானத்திற்கு நடுவே உயர் மின்கோபுரம்: கிராம மக்கள் எதிர்ப்பு

திருப்போரூர்: படூர் ஊராட்சியில் மயானத்துக்கு நடுவே அமைக்கப்படும் உயர் மின்கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். திருப்போரூர் ஒன்றியம் படூர் ஊராட்சி, பழைய மாமல்லபுரம் சாலையில் அதிவேகமாக வளர்ச்சியடைந்து வரும் ஊராட்சிகளில் ஒன்றாக உள்ளது. அதிக வருவாய் உள்ள ஊராட்சியாக இருப்பதால் இங்கு கலை, அறிவியல், மருத்துவம், பொறியியல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், நட்சத்திர ஓட்டல், ரெஸ்டாரன்ட்கள், உயர்தர இனிப்பகங்கள், ஏராளமான அடுக்குமாடி குடியிருப்புகள் என மினி சென்னை போன்று படூர் காட்சியளிக்கிறது.

பழைய மாமல்லபுரம் சாலையில் இருந்து படூர் கிராமத்துக்கு செல்லும் பிரதான சாலையில் மயானம் உள்ளது. இங்கு படூர் கிராமத்தை சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர், இந்த மயானத்தையே பயன்படுத்த வேண்டிய நிலை உள்ளது. புதிய அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் வீட்டு மனைப்பிரிவுகளால் மக்கள் தொகை அதிகரித்துள்ள இப்பகுதியில், தற்போது மயானத்தின் பரப்பளவு போதுமானதாக இல்லை. இதனால், படூர் ஊராட்சியில் காலியாக உள்ள புறம்போக்கு நிலத்தில் புதிய மயானம் ஏற்படுத்த வேண்டும் அல்லது மின்மயான வசதி செய்ய வேண்டும் என பொதுமக்களிடம் கோரிக்கை வலுத்து வருகிறது.

இந்நிலையில், மின்வாரியம் சார்பில், தற்போதுள்ள மயானத்தின் ஒரு பகுதியில் உயர்அழுத்த மின் வழித்தடம் அமைப்பதற்காக ராட்சத கோபுரம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மயானத்தின் ஒரு பகுதியில் பள்ளம் தோண்டி, அடித்தள இரும்பு கர்டர் பொருத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து விரைவில் உயர் கோபுரம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளன. இதற்கு படூர் கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். படூர் கிராமத்தில் சடலங்களை புதைப்பதை வழக்கமாக கொண்ட ஒரு பிரிவினர் வசிக்கின்றனர்.

இவர்களுக்காக மயானத்தின் ஒரு பகுதி ஒதுக்கப்பட்டு பல காலமாக சடலங்கள் புதைக்கப்பட்டு சமாதியும் அமைத்து வழிபடுகின்றனர். தற்போது அந்த இடத்தில் உயர் கோபுரம் அமைக்கப்படுவதால், வருங்காலத்தில் சடலங்களை புதைக்கவும், சமாதி அமைக்கவும் இடையூறாக இருக்கும் என பொதுமக்கள் கூறுகின்றனர். எனவே, யாருக்கும் இடையூறு இல்லாமலும், சமாதி அமைத்து வழிபடும் பிரிவினரின் நம்பிக்கையை பாதுகாக்கும் வகையிலும் வேறு இடத்தில் உயர்கோபுர மின் வழித்தடம் அமைக்க, சம்பந்தப்பட்ட உயர் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: