பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்ததால் தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைப்பு

சென்னை: குறைந்தபட்ச ஊதியம் ரூ.16,725 வழங்க வேண்டும், துப்புரவு பணியை தனியாருக்கு அளிக்க கூடாது, என்யூஎல்எம், என்எம்ஆர் தொழிலாளர்களின் வேலையை பறிக்க கூடாது, புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பணியாளர்களுக்கு ரூ.2 லட்சம் இழுப்பீடு வழங்க வேண்டும், அரசு அறிவித்த இரட்டிப்பு சம்பளம் மற்றும் ஊக்கத் ெதாகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கொடி சங்கத்தை சேர்ந்த 1500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் ரிப்பன் மாளிகை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்ட 291 பேரை பணி நீக்கம் செய்து மாநகராட்சி உத்தரவிட்டது. 500 மேற்பட்டோரிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளித்துள்ளது.

சங்க பொதுச் செயலாளர் பி.சீனிவாசலு, துணை பொது செயலாளர்கள் டி.ராஜன், ஜி.முனுசாமி, கே.தேவராஜ் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதை கண்டித்து, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று 100க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். இதில் சிஐடியு மாநில செயலாளர் சவுந்தரராஜன், சங்க தலைவர் மகேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆனால் போராட்டம் நடத்த காவல்துறை அனுமதி மறுத்தது. இதனையடுத்து தலைவர்களிடம் காவல்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதுதொடர்பான பேச்சுவார்த்தை இன்று ரிப்பன் மாளிகையில் நடத்துவதாக உறுதி அளித்ததின் அடிப்படையில் போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.

Related Stories: