வேளாண் மசோதாக்களுக்கு மக்களவையில் ஆதரவு; மாநிலங்களவையில் எதிர்ப்பு: விமர்சனத்திற்கு ஆளான முதல்வர் எடப்பாடி பழனிசாமி..!!

சென்னை: சர்ச்சைக்குரிய வேளாண் சட்டங்களை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஆதரித்து வாக்களித்துள்ள அதிமுக மக்களவையில் மத்திய அரசை பாராட்டிவிட்டு மாநிலங்களவையில் குறைகூறியிருக்கிறது.  அதேவேளையில் வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதிப்பு வராது என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடித்து சொல்லியிருப்பது கேட்போரை குழப்பத்தின் உச்சத்திற்கே அழைத்து சென்றிருக்கிறது. ஜெயலலிதா மறைவிற்கு பின் தேசிய அரசியலில் அதிமுகவின் நிலைப்பாடு திறனற்றதாக மாறியிருப்பதற்கு மேலும் ஒரு சாட்சியாக அமைந்திருக்கிறது வேளாண் சட்டங்கள் ஆதரவு விவகாரம். முத்தலாக் சட்டத்திற்கு மாநிலங்களவையில் இது சிறுபான்மையினர் நலனுக்கு எதிரான சட்டம் என்று எதிர்ப்பை பதிவு செய்த அதிமுக, மக்களவையில் ஆதரவு தெரிவித்தது. அதேபோல குடியுரிமை சட்ட விவகாரத்திலும் மக்களவையில் ஆதரவு, மாநிலங்களவையில் எதிர்ப்பு என்பதே அக்கட்சியின் நிலைப்பாடாக இருந்தது. இந்த வரிசையில் வேளாண் மசோதாக்களை மக்களவையில் ஆதரித்து பேசிய அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் குமார், விவசாயிகள் நலனில் அக்கறை காட்ட மத்திய அரசு எப்போதும் ஆர்வம் காட்டுவதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரவீந்திரநாத் தெரிவித்ததாவது, விவசாயிகளுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க மத்திய அரசு எப்போதும் ஆதரவாக உள்ளது. விவசாயிகள் சொந்த காலில் நிற்கும் வகையில் அம்சங்கள் உள்ளன.

வியாபாரிகளை விவசாயிகள் நம்பவேண்டியதில்லை. விளை பொருட்களுக்கு நல்ல விலை கிடைக்கும் அம்சங்களும் உள்ளன. கொள்முதல் மற்றும் விற்பனையில் வியாபாரிகள் மற்றும் விவசாயிங்கள் இடையே பிரச்சனைகள் ஏற்படாது. விவசாயிகளுக்கு முன்பு இருந்த கட்டுப்பாடுகள் நீங்கிவிடும். எனது தொகுதி விவசாயம் சார்ந்த இடம். இந்த மசோதா நிறைவேறினால், தமிழக பொருளாதாரம் வளர்ச்சி அடையும் என்பது நிச்சயம் என குறிப்பிட்டார். மக்களவையில் அதிமுக எடுத்த இந்த நிலைப்பாடு, பெரு நிறுவனங்களிடம் விவசாயிகளை அடகு வைக்கும் நடவடிக்கை என்று தமிழக விவசாயிகளை கொந்தளிப்படைய செய்தது. எதிர்க்கட்சி தலைவர்களும், மத்திய அரசுக்கு துணைபோகும் அதிமுகவை கடுமையாக சாடினர். இதையடுத்து மக்களவையில் ஆதரவு அளித்தது ஏன் என விளக்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, 6 பக்கத்திற்கு விரிவான அறிக்கையை வெளியிட்டார். அதில் மத்திய அரசின் விலை உறுதியளிப்பு மற்றும் பண்ணை ஒப்பந்தத்திற்கான விவசாயிகள் சட்டமானது ஒப்பந்த சாகுபடியை ஒழுங்குபடுத்த உதவும் என்று கூறியிருந்தார். இந்த சட்டத்தில் விவசாயிகளை கட்டுப்படுத்தவோ அல்லது பாதிக்கும் வகையில் பிரிவுகள் ஏதும் இல்லை என்று எடப்பாடி பழனிசாமி வாதிட்டிருந்தார்.

முறையான போட்டி வணிகம் மூலம், லாபகரமான விலையினை பெற்றிட வழிவகை செய்வதாகவும் எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். புதிய சட்டத்தின் மூலம் தமிழகத்தில் குறைந்தபட்ச ஆதார விலையில் நடைபெற்று வரும் நெல் கொள்முதல் போன்றவை எந்த விதத்திலும் பாதிக்காது என்று எடப்பாடி பழனிசாமி உறுதிபட கூறினார். மத்திய அரசின் புதிய சட்டங்களால், எதிர்பாராத விலை வீழ்ச்சியால் விவசாயிகள் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட்டு அவர்களுக்கு உறுதியான வருவாய் கிடைத்து நன்மை பயக்கும் என்பதை நன்கு உணர்ந்ததால் தான் அவற்றிற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று எடப்பாடி பழனிசாமி விளக்கமளித்திருந்தார். மத்திய அரசின் வேளாண் சட்டங்களில் குறையே இல்லை எடப்பாடி பழனிசாமி பாராட்டு பத்திரம் கொடுக்காத குறையாக, அறிக்கை வெளியிட்ட மறுநாளே மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்ட வேளாண் மசோதாக்கள் மீதான விவாதத்தில் அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம்  தெரிவித்த கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதிய வேளாண் சட்டங்களால் முதலீடே செய்யாமல் விவசாயிகளின் விளைநிலங்கள் பெரு நிறுவனங்கள் கைகளில் சென்றுவிடும். அரசின் குறைந்தபட்ச ஆதரவில்லை பயனற்று போகும் என்று சரமாரியாக குற்றம்சாட்டினார்.

மொத்தத்தில் இந்த சட்டங்களால் விவசாயிகளுக்கு பாதுகாப்பு உள்ளதா என்பது கேள்விக்குறிதான் என்றார். மக்களவையில் மத்திய அரசுக்கு பாராட்டு, மாநிலங்களவையில் விமர்சனம், மறுபுறம் வேளாண் சட்ட அம்சங்களில் பாதகமே இல்லை என்ற பாணியில் முதலமைச்சர் அறிக்கை என அதிமுகவின் முக்கோண கருத்துக்கள் பொதுமக்களுக்கு பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளன. அதேநேரத்தில் மாநிலங்களவையில் வேளாண் சட்டத்தை கடுமையாக விமர்சித்து பேசிய அதிமுக உறுப்பினர் எஸ்.ஆர். பாலசுப்ரமணியம் இறுதியில் அதற்கு ஆதரவாக வாக்களித்ததற்கு எஸ்.ஆர். பி சொன்ன விளக்கம் பார்வையாளர்களை திகைப்பில் ஆழ்த்தியுள்ளது. பாஜக அரசை ஆதரிக்க, நிர்பந்திக்கும் நிலையில் அதிமுக இருப்பதை எடுத்துக்காட்டியொத்தோடு முரண்பட்ட நிலைகள் அதிமுகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சைக்குரிய மசோதாவுக்கு ஆதரவான நிலையை எடப்பாடி பழனிசாமி எடுத்தது நான் ஒரு விவசாயி என்று அவர் கட்டமைக்கும் பிம்பத்தை கேள்விக்குறியக்கியிருக்கிறது.

Related Stories: