திருப்பூர் அரசு மருத்துவமனையில் 40 நிமிடம் மின்சாரம் துண்டிப்பு: ஆக்ஸிஜன் தடைபட்டு கொரோனா நோயாளிகள் 3 பேர் உயிரிழப்பு!!

திருப்பூர்:  திருப்பூர் அரசு மருத்துவமனையில் மின்சாரம் இல்லாததால் 3 நோயாளிகள் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் தாராபுரம் பகுதியில் திருப்பூர் அரசு மருத்துவமனை அமைந்துள்ளது. இங்கு திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பொதுமக்கள் உள் மற்றும் வெளி நோயாளிகளாக சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதற்கிடையில் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில், இன்றைய தினம் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 3 நோயாளிகள் மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. அதாவது இன்று காலையிலிருந்து கொரோனா வார்டில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

இதனால் போதிய ஆக்ஸிஜன் சிலிண்டரும் இல்லாததால் நோயாளிகள் அவதிப்பட்டு வருவதாக உறவினர்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் மருத்துவர்களும் இதுகுறித்து நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் கொரோனா வார்டில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த 65 வயதுடைய கவுரவன், 60 வயதுடைய யசோதா உள்பட 3 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இதையடுத்து திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயனிடம் இதுகுறித்து கேட்டபோது, அவர்கள் கொரோனா நோயால் உயிரிழந்ததாக தெரிவித்துள்ளார். தொடர்ந்து, மருத்துவமனையில் கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதால் கட்டட காண்ட்ராக்டர் ஒருவர் மின்சார ஒயர்களை துண்டித்துவிட்டதாக கூறியுள்ளார். இதையடுத்து ஒப்பந்ததாரர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யவும் உத்தரவிட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். ஆனால் உறவினர்கள் மருத்துவமனை அலட்சியத்தாலேயே 3 பேர் உயிரிழந்துள்ளதாக புகார் தெரிவிக்கின்றனர்.

Related Stories: