கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து கூடுதலாக 2 லட்சம் ஆர்டர்: சுகாதாரத்துறை அதிகாரிகள் தகவல்

சென்னை : கொரோனா சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்து கூடுதலாக 2 லட்சம் எண்ணிக்கையிலான ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.  கொரோனா தொற்றை குணப்படுத்த மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கப்படாத காரணத்தால், நோயின் தாக்கத்தைப் பொறுத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதன்படி ஒரு சில நோயாளிகளுக்கு ‘ரெம்டெசிவிர்’ என்ற வைரஸ் எதிர்ப்பு மருந்து  சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனை மற்றும் ஓமந்தூரார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அவர்களின் அனுமதி பெற்று வழங்கப்பட்டது. இந்நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்துவதில் அவை பயனளிக்கின்றன.

இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: “ராஜீவ் காந்தி மருத்துவமனையில் ‘ரெம்டெசிவிர்’ மருந்துகளும் அளிக்கப்பட்டன. இந்நிலையில் இந்த மருந்து நல்ல பலனை அளித்தது. இதனைத் தொடர்ந்து அதிதீவிர பாதிப்பு உள்ள நோயாளிகளுக்கு இந்த மருந்தை வழங்க தமிழக அரசு  முடிவு செய்தது. இதன்படி 1,67,500 மருந்துகள் தமிழக சுகாதாரத்துறை சார்பில் வாங்கப்பட்டு நோயாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழகம் சார்பில் கூடுதலாக 2 லட்சம் மருந்துகள் ஆர்டர் செய்யப்பட்டது. அதில் முதற்பட்டமாக 25 ஆயிரம் வந்துள்ளது. மீதமுள்ள மருந்துகள் சில நாட்களுக்குள் பெறப்படும் என தமிழ்நாடு  மருத்துவ பணிகள் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.

சேலம் அரசு மருத்துவமனையில் இருந்து கொரோனா வைரஸ் பாதித்த கைதி தப்பியோட்டம்

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்த காமலாபுரம் கத்திக்காரனூரைச் சேர்ந்த குமார் என்கிற நரேஷ்குமார் (21), லட்சுமி(60) என்பவரை கொலை செய்த வழக்கில் புளியங்குடி போலீசார் கைது செய்தனர். இதனையடுத்து  நரேஷ்குமாரை கைது செய்த போலீசார், சிறையில் அடைக்கும் முன் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர். அதில் குமாருக்கு பாசிட்டிவ் என ரிசல்ட் வந்தது. இதனையடுத்து சேலம் அரசு மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.  அதேசமயம், குமாரிடம் விசாரணை நடத்திய மல்லூர் இன்ஸ்பெக்டர் (பொ) குலசேகரன், போலீசார் மற்றும் செங்கோட்டையில் மடக்கி பிடித்த புளியங்குடி போலீசார் தனிமைப்படுத்தப்பட்டனர்.

 இதனிடையே, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கைதி நரேஷ்குமார், நேற்று அதிகாலை திடீரென மாயமானார். இதுகுறித்து மருத்துவமனை போலீசாருக்கும், மல்லூர் போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.  அவர்கள் மருத்துவமனை வளாகம் முழுவதும் சல்லடை போட்டு குமாரை தேடியும் கிடைக்கவில்லை. தொடர்ந்து, குமார் வசித்து வந்த காமலாபுரம் பகுதியிலும் போலீசார் தேடி வருகின்றனர்.

Related Stories: