கர்நாடக அணைகளில் 78 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு: காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

பென்னாகரம்: கர்நாடக அணைகளில் இருந்து 78ஆயிரம் கனஅடி உபரிநீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் காவிரியில் கரைபுரண்டு வந்து கொண்டிருப்பதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.  கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் ஏற்கனவே நிரம்பி உள்ளன. இந்நிலையில், கேரளா மற்றும் கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில், கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து  வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, அந்த அணைகளின் பாதுகாப்பு கருதி, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

கபினி அணையில் இருந்து விநாடிக்கு 35ஆயிரம் கனஅடியும், கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து 43ஆயிரம் கனஅடியும் என மொத்தம் 78 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இந்த தண்ணீர் தமிழகம் நோக்கி வந்து  கொண்டிருக்கிறது. இதனால் இருமாநில எல்லையான பிலிகுண்டுலுவில் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. கடந்த 2 நாட்களாக 13ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று மாலை 40,000 கனஅடியாக அதிகரித்தது.  நீர்வரத்து அதிகரிப்பால்,  ஒகேனக்கல்லில் மெயினருவி, ஐந்தருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இதேபோல், மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கி உள்ளது. நேற்று முன்தினம் 11,241 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை 12,480 கனஅடியாக அதிகரித்து இரவு 8 மணியளவில் 35,000 கனஅடியாக உயர்ந்தது. அணையில்  இருந்து டெல்டா பாசனத்திற்கு விநாடிக்கு 18ஆயிரம் கனஅடியும், கிழக்கு மேற்கு கால்வாயில் 700 கனஅடியும் திறந்து விடப்படுகிறது. நேற்று முன்தினம் 90.26அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று மாலை 89.92 அடியானது. நீர்இருப்பு 52.55 டிஎம்சி.  கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்டுள்ள உபரிநீர், இன்று அதிகாலை முழுமையாக மேட்டூர் அணையை வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் நீர்மட்டம் கிடுகிடுவென உயரும்.

முன்னதாக. தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழியின் உத்தரவுப்படி காவிரி கரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள், பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, தண்டோரா மூலம் நேற்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதேபோல், சேலம்  மாவட்டம் மேட்டூர் அடுத்த பண்ணவாடி பரிசல் துறை மற்றும் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: