அண்ணா பல்கலை 2ஆக பிரிக்க எதிர்ப்பு: கருப்பு பேட்ஜ் அணிந்து பேராசிரியர்கள் போராட்டம்

சென்னை: அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிப்தற்கான சட்ட மசோதா, சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து  போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  தமிழகத்தில் தற்போது இயங்கி வரும் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் 500க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில், அண்ணா பல்கலைக் கழகத்துக்கு தரச் சான்று வழங்குவதற்கு மத்திய அரசின் சார்பில்  கடிதம் அனுப்பி வைக்கப்பட்டது. அது தொடர்பாக தமிழக அரசிடம் இருந்து ஒப்புதல் கடிதம் இன்னும் அனுப்பி வைக்கப்படவில்லை.

இந்நிலையில், தரச் சான்று பெறுவதற்கு வசதியாகவும், நிர்வாக வசதிக்காகவும் அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிக்க தமிழக அரசு முடிவு செய்தது. அதற்கான சட்ட மசோதா சட்டப் பேரவையில் கடந்த 16ம் தேதி தமிழக  உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்த மசோதாவில், அண்ணா பல்கலைக் கழகத்துடன் இணைவு பெற்ற மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளை சென்னையில் இருந்து நிர்வாகம்  செய்து வருவது  அண்ணா பல்கலைக் கழகத்துக்கு சிரமமாக உள்ளது. அதனால், தற்போதுள்ள அண்ணா பல்கலைக்கழகத்தை இரண்டாக பிரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, இணைப்பு பெற்றுள்ள கல்லூரிகளை சிறந்த முறையில் கண்காணிக்கவும்,பொறியியல் மற்றும் தொழில் நுட்பத்தில் உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியில் அதிக கவனம் செலுத்தும் வகையில்,  இணைப்பு கல்லூரிகள் மற்றும் கல்வி  நிறுவனங்களை கொண்ட ‘‘ அண்ணா பல்கலைக் கழகம்’’ என்ற பெயரில் ஒரு பல்கலைக் கழகம் தோற்றுவிக்கப்பட உள்ளது.  மேலும், தற்போதுள்ள அண்ணா பல்கலைக் கழகத்தை ‘‘அண்ணா தொழில் நுட்பம் மற்றும் ஆராய்ச்சி பல்கலைக் கழகம்’’ என்ற பெயரில் ஒருமை வகை பல்கலைக் கழகமாக மாற்றி அமைக்கவும் அரசு தீர்மானித்துள்ளது என்று  தெரிவிக்கப்பட்டது. இந்த சட்ட மசோதா உடனடியாக பேரவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் ஏற்கப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

ஆனால், அண்ணா பல்கலைக் கழகத்தை இரண்டாக பிரிப்பதற்கு அண்ணா பல்கலைக் கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்து உயர்கல்வித்துறைக்கு பல முறை கண்டனங்களை தெரிவித்தும் பயன்  இல்லாத நிலையில் தற்போது பேராசிரியர்கள், ஊழியர்கள் அனைவரும் இந்த சட்ட மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும், இரண்டாக பிரிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கேட்டும் போராட்டத்தில் குதித்துள்ளனர். முதற்கட்டமாக அனைவரும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் தொடர் முழக்கப் போராட்டம் நடத்தவும்  முடிவு செய்துள்ளனர்.

Related Stories: