முதல்வர் எடப்பாடி ராமநாதபுரம் சென்றுள்ள நிலையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென கட்சி தலைமை அலுவலகத்தில் ஆலோசனை: அதிமுக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு

சென்னை: முதல்வர் எடப்பாடி நேற்று மாலை ராமநாதபுரம் சென்ற நிலையில், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு நேற்று இரவு திடீரென சென்று ஆலோசனை  நடத்தினார். இது அதிமுக வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற பிரச்னை கடந்த ஒரு மாதமாக விஸ்வரூபம் எடுத்து வருகிறது. எடப்பாடி பழனிசாமியை முன்னிறுத்தி ஒரு சாராரும், ஓ.பன்னீர்செல்வத்தை முன்னிறுத்தி ஒரு சாராரும் போஸ்டர் ஒட்டி  பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் கடந்த 18ம் தேதி சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் அவசர உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, 2017ம் ஆண்டு அதிமுக பொதுக்குழுவில் அறிவித்தபடி 11 பேர் கொண்ட வழிகாட்டு குழுவை அமைக்க வேண்டும் என்றார். இணை  ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி, இப்போது குழு அமைக்க அவசியம் இல்லை என்றார். இதனால் இருவருக்கும் நேருக்கு நேர் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து வருகிற 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் கூட்டி இதுபற்றி விவாதித்து முடிவு எடுக்கலாம் என்று கூறப்பட்டு அப்போதைக்கு பிரச்னை முடிவுக்கு வந்தது.அதேநேரம் கொரோனா தடுப்பு பணிகள் குறித்து ஒவ்வொரு  மாவட்டமாக சென்று முதல்வர் எடப்பாடி கடந்த ஒரு மாதமாக ஆலோசனை நடத்தி வருகிறார். கொரோனா ஆலோசனையை காரணம் காட்டி, அந்தந்த மாவட்டங்களில் உள்ள அதிமுக நிர்வாகிகளையும் சந்தித்து பேசி, தனது பலத்தை  கட்சியில் நிரூபித்து வருகிறார்.

இந்த நிலையில்தான் இன்று ராமநாதபுரம் மாவட்டத்தில் முதல்வர் ஆய்வு பணிகளை செய்கிறார். இதற்காக நேற்று மாலை 5 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை சென்றார். இரவு  மதுரையில் தங்கும் முதல்வர், இன்று கார் மூலம் ராமநாதபுரம் செல்கிறார்.ராமநாதபுரம் மாவட்டம் மதுரை மாவட்டம் அருகே உள்ளது. அதனால், இன்று ராமநாதபுரத்தில் நடைபெறும் அரசு விழாவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ஓ.பன்னீர்செல்வம்  மதுரை செல்லாமல், முதல்வர் விழாவை புறக்கணித்து விட்டு சென்னையிலேயே தங்கி விட்டார்.

அதேநேரம், யாரும் எதிர்பார்க்காத நிலையில் நேற்று மாலை 6.30 மணிக்கு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திடீரென சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்றார். அவருடன் செம்மலை  எம்எல்ஏ மட்டுமே சென்றார். வேறு எந்த அமைச்சர்களும், மூத்த நிர்வாகிகளும் செல்லவில்லை.அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தில் கட்சி அலுவலக நிர்வாகிகளுடன் அவர் சிறிது நேரம் ஆலோசனை நடத்தினார். பின்னர், கட்சி பணிகள் குறித்தும், கட்சி தலைமைக்கு வந்துள்ள புகார் கடிதங்கள்  குறித்தும் படித்து தெரிந்து கொண்டார். அங்கிருந்தபடியே சில மாவட்ட நிர்வாகிகளுக்கு தொலைபேசி மூலம் பேசி கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து ஓ.பன்னீர்செல்வம் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இரவு 8 மணி வரை கட்சி  அலுவலகத்தில் இருந்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியூர் சென்றுள்ள நிலையில், அதிமுக கூட்டத்தில் மோதல் நடந்துள்ள நிலையில் திடீரென துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கட்சி தலைமை அலுவலகத்துக்கு சென்றுள்ளது அதிமுக வட்டாரத்தில் திடீர்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறும்போது, “அதிமுக அவசர ஆலோசனை கூட்டம் கடந்த 18ம் தேதி நடந்தபோது, வாரம் 2 முறை கட்சி அலுவலகத்துக்கு வந்து நிர்வாகிகளின் கருத்துக்கள் மற்றும் குறைகள், பிரச்னைகள்  குறித்து கேட்பேன் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறி இருந்தார். அதன் அடிப்படையில் அவர் கட்சி அலுவலகத்துக்கு சென்றார்.

மேலும், வருகிற 28ம் தேதி அதிமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 250 முதல் 300 பேர் வரை கலந்து கொள்வார்கள். குறிப்பாக செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் அழைப்பு கடிதம் அனுப்புவது மற்றும் அந்த  கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்கள் குறித்து ஆலோசனை நடத்த ஓ.பன்னீர்செல்வம் தலைமை அலுவலகத்துக்கு சென்றார்” என்று கூறினார். அதேநேரம், முதல்வர் இல்லாத நேரம் ஏன் துணை முதல்வர் கட்சி தலைமை அலுவலகத்துக்கு செல்ல வேண்டும் என்ற கேள்விக்கு பதில் அளிக்க அதிமுக நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.

Related Stories: