தலைமை செயலக ஊழியர்களுக்கு விரைவில் பயோமெட்ரிக் அறிமுகம்

சென்னை: தலைமை செயலக ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேடு விரைவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்காக புகைப்படம் எடுக்கும் பணி நேற்று தொடங்கியது.சென்னை தலைமை செயலகத்தில் இதுவரை பயோமெட்ரிக் முறை அமல்படுத்தவில்லை. அடையாள அட்டை மட்டுமே அணிந்து பணியில் இருக்க வேண்டும் என்று துறை செயலாளர்கள் உத்தரவிட்டுள்ளனர். வழக்கமாக, தலைமை செயலக  ஊழியர்கள் காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை பணியில் இருக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான ஊழியர்கள் காலை மிகவும் தாமதமாக வருவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளன.

மேலும் தலைமை செயலக வளாகத்தில் உள்ள கடைகளில் பலர் அதிக நேரம் செலவு செய்வதாகவும் புகார் வந்தது.இதுபோன்ற தவறுகளை சரி செய்ய, தலைமை செயலக ஊழியர்களுக்கும் பயோமெட்ரிக் முறை அறிமுகப்படுத்த துறை  செயலாளர்கள் உத்தரவிட்டுள்ளனர்.  க்யூஆர் பதிவு கொண்ட பலவகை பயன்பாட்டிற்கான அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இதையடுத்து நேற்று முதல் தலைமை செயலகத்தில் துறை வாரியாக புகைப்படும் எடுக்கும் பணி தொடங்கியுள்ளது. நேற்று வேளாண் துறை, போக்குவரத்து துறை, தகவல் தொடர்பு, பொதுப்பணித்துறை, உயர் கல்வி துறை உள்ளிட்ட 745  பேருக்கு புகைப்படம் எடுக்க, அங்குள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 3வது மாடியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனால் காலை 10 மணி முதலே அரசு ஊழியர்கள் மொத்தமாக அங்கு கூடினர்.

குறிப்பாக, இந்த கொரோனா காலத்தில் சமூகஇடைவெளி எதுவும் பின்பற்றாமல் அரசு ஊழியர்கள் முண்டியடித்துக் கொண்டு புகைப்படம் எடுக்க வரிசையில் நின்றனர். நேற்று மாலை வரை அனைவருக்கும் புகைப்படம் எடுக்கும் பணி நடந்தது. அதேபோன்று, இன்று (22ம் தேதி) குடிநீர் வாரியம், மின்சாரம், உள்துறை, தொழில்துறை, பள்ளி கல்வி துறை ஆகிய துறைகளை சார்ந்த 775 பேருக்கும், நாளை (23ம் தேதி) வருவாய், சுற்றுலா, வீட்டுவசதி உள்ளிட்ட துறைகளை சார்ந்த 730  பேருக்கும், 24ம் தேதி 7 துறைகளை சேர்ந்த 586 பேருக்கும், 25ம் தேதி 734 பேருக்கும் புகைப்படம் எடுக்கப்பட உள்ளது. அதற்கான அறிவிப்பை, துணை செயலாளர் ஏ.ஆர்.ராகுல் நாத் அனைத்து துறை செயலாளர்கள் அலுவலகத்துக்கும்  தெரிவித்துள்ளார்.

Related Stories: