வனப்பகுதியில் 1 மணி நேரம் துப்பாக்கி சண்டை தெலங்கானாவில் நுழைய முயன்ற 2 மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை

திருமலை: சட்டீஸ்கரில் இருந்து தெலங்கானாவில் நுழைய முயன்ற மாவோயிஸ்டுகளை போலீசார் சுற்றி வளைத்தபோது கடும் துப்பாக்கி சூடு நடந்தது. சுமார் 1 மணி நேரம் இருதரப்புக்கும் இடையே நடந்நத துப்பாக்கி சூட்டில் 2 மாவோயிஸ்ட்கள் பலியாயினர். தெலங்கானா- சட்டீஸ்கர் மாநில எல்லையில் மாவோயிஸ்டு தீவிரவாதிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. சட்டீஸ்கரில் இருந்து 1000க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் கடந்த வாரம் பயங்கர ஆயுதங்களுடன் தெலங்கானா மாநிலத்திற்குள் நுழைந்தனர்.  அங்குள்ள காட்டாற்றை கடந்து அவர்கள் சாரை சாரையாக வந்த காட்சி டிரோன் கேமரா மூலம் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அப்பகுதியில் உள்ள வனப்பகுதியில் கடந்த 15 நாட்களாக மாவோயிஸ்டுகள் பதுங்கியிருப்பதாகவும், அவர்கள் பெரிய அளவில் நாசவேலையில் ஈடுபடலாம் எனவும் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவர்களை கூண்டோடு பிடிக்க இருமாநில போலீசார் மாநில எல்லையில் அதிகளவில் குவிக்கப்பட்டனர். இவர்கள் இரவு, பகல் பாராமல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை சட்டீஸ்கர் மாநில எல்லையில் இருந்து, தெலங்கானா மாநிலம் குமரம் பீம், ஆதிலாபாத், நிர்மல் அசிமாபாத் ஆகிய மாவட்டங்களுக்கு இடையே மாவோயிஸ்ட் இயக்க மண்டல குழுவை சேர்ந்த பாஸ்கர் என்பவர் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மாவோயிஸ்டுகள் நுழைய முயற்சி செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காக்காஜி நகர் போலீசார் மற்றும் சிறப்பு அதிரடி போலீசார் வனப்பகுயில் குவிக்கப்பட்டனர். அப்போது அங்கு வந்த மாவோயிஸ்டுகளை பிடிக்க முயன்றனர்.

இதனால் ஆத்திரமடைந்த மாவோயிஸ்டுகள் திடீரென போலீசார் மீது சரமாரியாக கற்களை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் கடும் தாக்குதல் நடத்தினர். போலீசாரும் அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்த தொடங்கினர். இருதரப்புக்கும் இடையே சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக துப்பாக்கி சண்டை நடந்தது. இந்த துப்பாக்கி சூட்டில் சட்டீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த சுக்கலு என்பவர் உள்பட 2 மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் பலியாகினர். மற்றவர்கள் தப்பியோடிவிட்டனர். இதையடுத்து போலீசார் பலியான 2 மாவோயிஸ்டுகள் உடல்கள் மற்றும் அங்கிருந்த 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.  ேமலும் தப்பியோடிய மற்ற மாவோயிஸ்டுகளை பிடிக்க இருமாநில போலீசாரும் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: