பொன்னேரி அருகே ஒருநாள் மழைக்கே 100 ஏக்கர் நாற்றுகள் நாசம்: விவசாயிகள் வேதனை

சென்னை:  பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் 20,000க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. பெரியகரும்பூர் கிராமத்தில் தற்போது நடவுப்பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கடந்த இரு தினங்களுக்கு முன்பு பெய்த  மழையால் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடப்பட்ட நாற்றுகள் அனைத்தும் தண்ணீரில் மூழ்கி நாசமானது. மேலும், விளைநிலங்களில் மேலிருந்து கீழ் நோக்கி மழைநீர் வடியும் சூழலில், கீழ்ப்பகுதிகளில் உள்ள விவசாய நிலங்களில் வண்ணமீன் பண்ணை மற்றும் இறால் பண்ணைகளுக்காக கரைகள் அமைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மழைநீர் வெளியேற வழியில்லாமல் விளைநிலத்திலேயே தேங்கியுள்ளது.

இதுகுறித்து பலமுறை வேளாண்துறை, வருவாய்த்துறை, மாவட்ட நிர்வாகம் என பல அதிகாரிகளிடம் புகார் அளித்தும் எந்த பலனும் இல்லை.  நூற்றுக்கணக்கான ஏக்கர் கணக்கில் விளைநிலத்தை மழைநீர் மூழ்கடித்து தங்களை பாதிப்பிற்கு உள்ளாக்குவதால் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை என விவசாயிகள் குமுறினர்.  மழைநீர் வடிய உரிய முறையில் வடிகால் வசதி செய்து தரவேண்டும். ஒருநாள் மழைக்கே சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் நடப்பட்ட நாற்றுகள் தண்ணீரில் மூழ்கியதால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து விவசாயத்தை காப்பாற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்.

Related Stories: