கொரோனா ஊரடங்கால் மூடிகிடந்து 6 மாதத்துக்கு பின்காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் மீண்டும் திறப்பு: வியாபாரிகள், மக்கள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம்: கொரோனா ஊரடங்கால், மூடப்பட்டு இருந்த காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட், 6 மாதத்துக்கு பின் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். காஞ்சிபுரத்தில் ரயில்வே சாலையில் உள்ள ராஜாஜி மார்க்கெட்டில் 200க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள், மளிகை கடைகள் உள்ளன. இங்கு, சென்னையில் இருந்து காய்கறிகள் கொண்டு வந்து, வியாபாரிகளுக்கு மொத்தமாகவும், பொதுமக்களுக்கு சில்லறை விற்பனையும் செய்யப்படுகிறது. காஞ்சிபுரத்தின் மைய பகுதியில் ராஜாஜி மார்க்கெட் அமைந்துள்ளதால், சுற்றுவட்டார பகுதிகளான தாமல், பாலுச்செட்டிசத்திரம், முசரவாக்கம், பரந்தூர், சிறுணை, வாலாஜாபாத், ஐயம்பேட்டை, ஐயங்கார்குளம், அப்துல்லாபுரம், மாமண்டூர் உள்பட பல பகுதிகளை சேர்ந்த மக்கள் மற்றும் வியாபாரிகள் காய்கறி மற்றும் மளிகை பொருள்களை வாங்கி சென்றனர்.

கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் இறுதியில் ராஜாஜி மார்கெட் மூடப்பட்டு, வையாவூர் சாலையில் தற்காலிகமாக காய்கறி சந்தை துவங்கப்பட்டது. ஒரு சில வாரங்களே அங்கு செயல்பட்ட மார்க்கெட் பகுதி, பலத்த மழையால் அப்பகுதி சேறும் சகதியுமாக மாறியது. இதையடுத்து, மாவட்ட நிர்வாகம், நசரத்பேட்டையில் உள்ள பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மைதானத்துக்கு காய்கறி சந்தையை மாற்றியது. ஆனால், காஞ்சிபுரத்தில் இருந்து 7 கிமீ தூரத்துக்கு சந்தை மாற்றப்பட்டதால் பொதுமக்களும், வியாபாரிகளும் அவதிப்பட்டனர். இந்நிலையில், கொரோனா ஊரடங்கில் அரசு தளர்வுகளை அறிவித்தது. இதைதொடர்ந்து, ராஜாஜி மார்க்கெட் மீண்டும் திறக்கப்பட்டு காய்கறி வியாபாரம் நேற்று தொடங்கியது. இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் மகிழ்ச்சியடைந்தனர்.

அதிமுகவினரின் அதிருப்தி செயல்

மார்க்கெட் திறக்கப்பட்டதை முன்னிட்டு, பிரதான வாயில் மலர்களால் அலங்கரித்தும் மேளதாளத்துடன் 200க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மற்றும் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் முகக்கவசம் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் பெரும் விழாவாக கொண்டாடினர். இதை பார்த்த மக்களுக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதில் பங்கேற்ற அதிமுக மாவட்ட செயலாளர் சோமசுந்தரம், கடந்த சில நாட்களுக்கு முன் கொரோனா சிகிச்சை பெற்று திரும்பினார். கொரோனா பரவலை கட்டுப்படுத்த, அரசு பல்வேறு நடவடிக்கை எடுத்தும், அதிமுகவினர் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது, தொற்றுபரவலுக்கு காரணமாகிவிட்டது என மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

Related Stories: