பயணிகளின் கடும் எதிர்ப்புக்கு பணிந்தது அரசு ஏர்போர்ட்டில் இ-பாஸ் கவுன்டர்கள் 2 நாளுக்கு பின்பு மீண்டும் திறப்பு

சென்னை: விமான நிலையத்தில் மூடப்பட்ட  இ-பாஸ் கவுன்டர்கள் 2 நாட்களுக்கு பின்பு  மீண்டும் திறக்கப்பட்டது. கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மாநிலங்கள் இடையே பயணிக்க இ-பாஸ்கள் கட்டாயம் என்று அறிவித்திருந்தது. இதையொட்டி சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் வருகை பகுதியில் தமிழக அரசின் வருவாய் துறையினர் அமைத்திருந்த இ-பாஸ் கவுன்டர்கள் தொடர்ந்து செயல்பட்டன. வெளி மாநிலங்களிலிருந்து வரும் விமான பயணிகள் அந்த கவுன்டர்களில் இ-பாஸ்களைபெற்று, விமான நிலையத்திலிருந்து வெளியே சென்றனர்.

இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணியிலிருந்து மாநில அரசு அமைத்திருந்த இ-பாஸ் கவுன்டர்கள் எந்தவிதமான முன்னறிவிப்புமின்றி திடீரென மூடப்பட்டன. இதனால்பயணிகள் இ-பாஸ்கள் வாங்கி வெளியே செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர். சென்னை விமான நிலைய அதிகாரிகள் அந்த பயணிகளிடம் தங்களுடைய செல்போன்களில் ஆன்லைனில் விண்ணப்பித்து இ-பாஸ் பெற்று வெளியே செல்லும்படி கூறினர். ஆனால் பயணிகள் பலர் விண்ணப்பித்தாலும் இ-பாஸ்கள் கிடைப்பதில் சிரமம் ஏற்பட்டது. அவர்களுக்கு விமான நிறுவனம் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் ஆன்லைனில் இ-பாஸ்கள் எடுக்க உதவினர். இதனால் சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில்  விமானங்களில் வந்த பயணிகள் இ-பாஸ்கள் இல்லாமல் வெளியில் செல்ல முடியாமல் கடும் அவதிப்பட்டனர்.

அதோடு பயணிகளுக்கும் பாதுகாப்பு அதிகாரிகள், விமான நிலைய அதிகாரிகளுக்கும் இடையே கடும் வாக்குவாதங்களும் ஏற்பட்டன. இதுகுறித்து தினகரன் நாளிதழில்  செய்தி வெளியானது.  அதோடு பயணிகள் பலர் மாநில அரசுக்கும், சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகளுக்கும் இ-மெயில் மூலம் புகார்கள் தெரிவித்தனர். இதையடுத்து மாநில அரசு மீண்டும் சென்னை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இ-பாஸ் கவுன்டர்களை அமைக்க முடிவு செய்தது. அதற்காக சென்னை விமான நிலைய உயர் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டனர். சென்னை விமான நிலையத்திற்குள் மீண்டும் விமான நிலைய அதிகாரிகள் இடம் ஏற்படுத்தி கொடுத்ததையடுத்து, மீண்டும் நேற்று பிற்பகலில் இருந்து இ-பாஸ் கவுன்ட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.

Related Stories: