தற்காலிக பேரவைக்கு ரூ.1.20 கோடியில் வாங்கிய மேஜை, நாற்காலி குடோனில் வைப்பது ஏன்? சமூக ஆர்வலர்கள் கேள்வி

சென்னை: கலைவாணர் அரங்கத்தில்  தற்காலிகமாக அமைந்த சட்டசபைக்காக வாங்கப்பட்ட ரூ.1.20 கோடி மதிப்பிலான பொருட்கள் குடோன்களில் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அவை யாருக்கும் பயனில்லாமல் வீணாகி போய் விடும் நிலை ஏற்பட்டுள்ளது என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். சென்னை சேப்பாக்கம் வாலாஜா சாலையில் உள்ள கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் கடந்த 14ம் தேதி முதல் 16ம் தேதி வரை நடைபெற்றது. இதற்காக, கலைவாணர் அரங்கத்தில் 3வது தளம் பொதுப்பணித்துறை சார்பில் தற்காலிக சட்டசபையாக மாற்றப்பட்டன. மேலும், இரண்டாவது தளத்தில் முதல்வர், துணை முதல்வர், அமைச்சர்கள், ஆளும் கட்சி எம்எல்ஏக்களுக்கு அறைகள் ஒதுக்கப்பட்டன.

தரைதளத்தில் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் எதிர்க்கட்சி எம்எல்ஏக்களுக்கான அறைகள் ஒதுக்கப்பட்டன.

இதற்காக, புதிததாக மேஜை, நாற்காலிகள், மைக், மின் விசிறி, ஸ்பீக்கர் லைட் உள்ளிட்டவை ரூ.1.20 கோடி செலவில் வாங்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த 16ம் தேதியுடன் சட்டசபை முடிந்தது. இதையடுத்து, தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த அரங்கத்தில் இருந்த மேஜை, நாற்காலி உள்ளிட்ட அனைத்தும் அகற்றப்பட்டன. மேலும், முதல்வர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் ஓய்வு எடுப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த அறைகளில் வைக்கப்பட்டிருந்த மேஜை, நாற்காலிகள் உள்ளிட்ட அனைத்து பொருட்களும் அகற்றப்பட்டன. தற்போது அந்த பொருட்களில் சிலவற்றை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையிலும், மீதமுள்ள பொருட்களை சேப்பாக்கம் எழிலக வளாகத்தில் பொதுப்பணித்துறை குடோன்களில் வைக்கப்பட்டுள்ளன. இதனால், தற்காலிகமாக சட்டசபையில் வாங்கப்பட்ட ரூ.1.20 கோடி மதிப்பிலான பொருட்கள் வீணாகி போய் விடும் நிலை ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: