நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வலியுறுத்தி அறவழியில் போராடியவர் மீது தாக்குதல் நடத்துவதா? எஸ்.டி.பி.ஐ.கட்சி கடும் கண்டனம்

சென்னை: எஸ்.டி.பி.ஐ.கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்ட அறிக்கை:

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி மக்கள் பாதை அமைப்பை சேர்ந்தவர் சென்னை சின்மயா நகரில் உள்ள அந்த அமைப்பின் தலைமை அலுவலகத்தில் கடந்த 7 நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பாதை அமைப்பினரை மிகவும் அராஜகமான முறையில் காவல்துறை கைது செய்துள்ளது. இந்த தாக்குதலில் பலரும் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. காவல்துறையின் இந்த தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கையை எஸ்.டி.பி.ஐ. கட்சி வன்மையாக கண்டிக்கிறது.

ஜனநாயக முறையில் செயல்படும் ஒரு அமைப்பின் மீது தடை செய்யப்பட்ட அமைப்பை போன்று நடவடிக்கை மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது. நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ள தமிழக அரசு, அதே நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மக்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுப்பது தவறானது. ஆகவே, தமிழக மாணவர்களின் நலனுக்காக அறவழியில் நடைபெற்ற போராட்டம் மீது  பலபிரயோகம் செய்த காவல்துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கைது செய்யப்பட்டு காயமடைந்துள்ள அந்த அமைப்பை சேர்ந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள அனைவரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.

Related Stories: