நெல்லை அருகே முறைகேட்டில் ஈடுபட்ட குவாரிக்கு ரூ9.50 கோடி அபராதம் கனிம வளத்துறைக்கும் தொடர்பு?... நிருபர் உட்பட 4 பேர் கைது

நெல்லை: நெல்லை, கல்லிடைக்குறிச்சி அருகே பொட்டல் கிராமத்தில் முறைகேட்டில் ஈடுபட்ட எம்.சாண்ட் குவாரிக்கு ரூ9.50 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. இந்த முறைகேட்டில் கனிம வளத்துறைக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நெல்லை மாவட்டம், அம்பை தாலுகாவிற்கு உட்பட்ட பொட்டல் கிராமத்தில்  எம்.சாண்ட் மணல் குவாரி உள்ளது. இந்த குவாரியில் விதிமுறைகள் மீறி பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக சேரன்மகாதேவி சப்-கலெக்டர் பிரதீக் தயாளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன் குவாரியில் சப் கலெக்டர் மேற்கொண்ட அதிரடி ஆய்வில் முறைகேடுகள் நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

விதிமுறைகளை மீறி முறைகேட்டில் ஈடுபட்ட குவாரிக்கு சேரன்மகாதேவி சப் கலெக்டர் பிரதீக் தயாள் ரூ9.57 கோடி அபராதம் விதித்தார். இதையடுத்து வி.ஏ.ஓ. சஸ்பெண்ட் செய்யப்பட்டு துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது. ேகரள மாநிலத்தை சேர்ந்தவருக்கு சொந்தமான இடத்தில் இருந்த எம்-சாண்ட் குவாரிக்கு கனிமவளத் துறை அதிகாரிகள் மற்றும் அமைச்சர் உடந்தையாக செயல்பட்டுள்ளனர். இதனால்தான் முறைகேடுகள் நடந்த போதும் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர். தற்போது ஐகோர்ட் கண்டனத்திற்கு பிறகு தான், சப் கலெக்டர் ஆய்வு நடத்தி முறைகேடுகளை வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளது தெரிகிறது.

எனவே இவ்வளவு பெரிய முறைகேடுகளுக்கு பிறகும் எம்-சாண்ட் குவாரி தொடர்ந்து எப்படி செயல்பட்டது என்ற கேள்வி எழுந்துள்ளது. எனவே இதுகுறித்து ஐஏஎஸ் அதிகாரி தலைமையில் முழு விசாரணை நடத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர். மேலும் வேளாண் பொறியியல் துறையினரும் மீன் குட்டைகளுக்கு தோண்டிய மண்ணை முறைகேடாக விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இதுகுறித்தும் விசாரணை நடந்து வருகிறது. விசாரணை முடிவில் பல அரசு அதிகாரிகள் சிக்குவார்கள் என தெரிகிறது. இதனால் எம்-சாண்ட் அபராத விவகாரம் சூடுபிடித்துள்ளது.

நிருபர் உள்பட 4 பேர் கைது: எம்.சாண்ட் குவாரிக்கு முறைகேடாக மணல் கடத்தலில் ஈடுபட்டது குறித்து மண்டல துணை தாசில்தார் மாரிச்செல்வம் அளித்த புகாரின் பேரில், மணல் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த பொட்டல் கிராமத்தைச் சேர்ந்த பத்திரிகை நிருபர் ஜான் பீட்டர் (29),  பால்ராஜ் (38),  சங்கரநாராயணன் (27), ஆத்தியப்பன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: