4 கட்ட கொரோனா சோதனை எதிரொலி; எத்தன தடவ அத செக்-அப் செய்வீங்க.. போங்கடா நீங்களும் கொரோனாவும்... பயணிகள் கொந்தளிப்பால் விமான நிலையத்தில் பரபரப்பு

சென்னை: ஒருத்தருக்கு எத்தனை சோதனை தான் நடத்துவீங்க போங்கடா... நீங்களும் உங்க செக்-அப் சிஸ்டமும் என்று பயணிகள் அதிகாரிகளிடம் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இந்தியாவிலிருந்து  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் துபாய் சென்ற இந்தியர்களை துபாய் விமான நிலையத்தில் சோதனையிட்டதில்  2 இந்தியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 2 பயணிகளையும் துபாயில் தனிமைப்படுத்தியதோடு, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் இந்தியாவிலிருந்து துபாய் வருவதற்கு 15 நாட்கள் தடையை, துபாய் போக்குவரத்துத்துறை விதித்துள்ளது.

அதோடு அந்த 2 இந்தியர்கள் தனிமைப்படுத்தலுக்கான முழு செலவையும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனமே ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து இந்தியாவிலிருந்து குறிப்பாக சென்னை சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளிநாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பயணிக்க வரும் அனைத்து பயணிகளையும் அதிகாரிகள் தீவிரமாக பரிசோதிக்கின்றனர். சர்வதேச முனையத்தின் போர்டிகோ பகுதியிலேயே அந்தந்த விமான நிறுவன ஊழியர்கள் நின்று பயணிகளின் உடல் வெப்பநிலையை தெர்மல் ஸ்கேன் செய்கின்றனர். அதோடு பயணியின் கொரோனா மருத்துவ பரிசோதனை சான்றிதழை வாங்கி பரிசோதிப்பது மட்டுமின்றி, பாஸ்போர்ட்டில் உள்ள பெயரும்,

கொரோனா மருத்துவ சான்றிதழ் பெயரும் ஒன்றாக இருக்கிறதா என்று ஆய்வு செய்கின்றனர். இதையடுத்து விமான கவுன்டரில் போர்ட்டிங் பாஸ் வாங்கும் இடத்தில் மீண்டும், கொரோனா மருத்துவ சான்றிதழ் பரிசோதிக்கின்றனர். பின்பு குடியுரிமை சோதனை நடக்கும் இடத்திலும்,கொரோனா மருத்துவச் சான்றிதழை பரிசோதிக்கின்றனர். அதன்பின்பு விமானத்திற்குள் ஏறும் இடத்திலும் கொரோனா மருத்துவ சான்றிதழை சரிபார்த்து விமானத்திற்குள்  ஏற அனுமதிக்கின்றனர்.

இதைப்போல் வெளிநாடு செல்லும் பயணிகளின் கொரோனா மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களை சென்னை விமானநிலையத்தில் 4 இடங்களில் பரிசோதனை செய்கின்றனர்.

இதனால் வெளிநாடு செல்லும் பயணிகள் எத்தனை முறைதான் சான்றிதழை காட்டுவது... போங்கடா நீங்களும் உங்கள் கொரோனா பரிசோதனை சிஸ்டமும் என்று அதிகாரிகளிடம் கோபத்துடன் கொந்தளித்தனர். அதன் பின்னர் அதிகாரிகள் சமாதானம் செய்த பிறகே அங்கிருந்து கேள்வி எழுப்பியபடி ஆத்திரத்துடன் சென்றனர்.

Related Stories: