மாற்றுதிறனாளி, சிறப்பு குழந்தைகளுக்கு தேர்வா? : பெற்றோர் கவலை: அரசு மெத்தனம்

சென்னை: தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை அடுத்து, கடந்த மார்ச் மாதம் 25ம் தேதி  முதல் அனைத்து வகை பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டன. அதனால் பொதுத் தேர்வுகள் நடத்துவதில் தடங்கல் ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு மற்றும் கீழ் வகுப்புகளுக்கான ஆண்டுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர்.ஆனால்,  கொரோனா தொற்று குறையாமல் உள்ள இந்த சூழ்நிலையிலும், சிறப்பு பள்ளிகளில் படித்து வரும் சிறப்பு குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறன் கொண்ட  குழந்தைகளுக்கு மேற்கண்ட சலுகை வழங்கப்படவில்லை.

இதனால் சிறப்பு குழந்தைகள், மாற்றுத் திறன் கொண்ட மாணவ மாணவியர் தேர்வு எழுத வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் அதை சமாளிக்க முடியாது என்பதால் பெற்றோர் அச்சத்தில் உள்ளனர்.

இதன்படி சுமார் 1000 சிறப்பு குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகள் வரும் வாரத்தில் தேர்வு எழுதுவதற்காக திட்டமிடப்பட்டுள்ளது.இந்த தேர்வு எழுதுவதில் இருந்து சிறப்பு குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று கடந்த சில நாட்களாக மேற்கண்ட குழந்தைகளின் பெற்றோர் மற்றும் சமூக நல அமைப்புகளின் சார்பில், மறுவாழ்வுத்துறை ஆணையரை சந்தித்து முறையிட்டு வருகின்றனர்.

அரசுக்கும் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் அரசும், அதிகாரிகளும் இது குறித்து எந்த முடிவும் எடுத்து அறிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். இதனால் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். மேலும், இந்த தேர்வை தற்போதைக்கு நிறுத்தி வையுங்கள் என்றும்கூட தெரிவித்தனர். ஆனால், தேர்வை ஒருபோதும் ரத்து செய்ய முடியாது, சிறப்பு குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறன் கொண்ட குழந்தைகளுக்கான அகமதிப்பீடு என்பது வழக்கமான அகமதிப்பீடுகளில் இருந்து வேறுபட்டது, அதனால் ரத்து செய்ய முடியாது என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரம் குறித்து உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் தீர்ப்பை எதிர்பார்த்து பெற்றோர் காத்திருக்கின்றனர்.

இதற்கிடையே, தமிழகத்தில் கடந்த வாரம் முதல் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் புத்தகங்கள், மற்றும் உணவுப் பொருட்கள் வினியோகம் போன்ற எந்த நடவடிக்கையிலும், கொரோனா தொற்று பாதுகாப்பு நடவடிக்கையில் தெரிவிக்கப்பட்ட விதிகளை யாரும் கடைபிடிக்கவில்லை. அதனால் பள்ளி மாணவர்களுக்கும் கொரோனா தொற்றுக்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாக கூறப்படுகிறது.

Related Stories: