கொரோனாவால் களையிழந்த மகாளய அமாவாசை - ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், திருவையாறு படித்துறைகள் வெறிச்சோடின

தடையை மீறி காவிரி கரைகளில் மக்கள் தர்ப்பணம்

திருச்சி : கொரோனா காரணமாக மகாளய அமாவாசைக்கு நீர்நிலைகளில் தர்ப்பணம் கொடுக்க தடைவிதிக்கப்பட்டதால் ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், திருவையாறு புஷ்பமண்டபம் படித்துறைகள் மூடப்பட்டதால் வெறிச்சோடின. தடையை மீறி காவிரி கரைகளில் மக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

புரட்டாசி மாதத்தில் வரும் மகாளய அமாவாசை நேற்று கடை பிடிக்கப்பட்டது.

பொதுமக்கள் தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் கொடுக்க நீர்நிலைகள், கடற்கரைக்கு வந்து நீராடி தர்ப்பணம் கொடுப்பர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நீர்நிலைகளில் திதி கொடுக்க தடை விதிக்கப்பட்டன. நாகை, வேதாரண்யம் கடற்கரைகளில் தடை விதிக்கப்படவில்லை.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் படித்துறையில் திருச்சி மாவட்டம் மட்டுமின்றி வெளிமாவட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான மக்கள் வருவார்கள் என்பதால் தர்ப்பணத்துக்கு தடை விதிக்கப்பட்டு அம்மா மண்டபம் படித்துறை பூட்டப்பட்டது. இது தெரியாமல் திருச்சி மாவட்டம் மட்டுமில்லாது பல்வேறு மாவட்டங்களிலிருந்து மக்கள் அதிகளவில் வந்தனர்.

அம்மா மண்டபத்துக்கு மக்கள் வருவதை தடுக்க மாம்பழச்சாலையிலே போலீசார் நிறுத்தப்பட்டு பேரிகார்டு வைத்து மக்களை திருப்பி அனுப்பினர். இதனால் தர்ப்பணம் கொடுக்க முடியாமலே மக்கள் ஏமாற்றத்துடன் சாரை சாரையாக திரும்பி சென்றனர். சிலர் காவிரி கரைகளில் இறங்கி புரோகிதர்கள் இன்றி தர்ப்பணம் கொடுத்து சென்றனர். தடையை மீறி கம்பரசம்பேட்டை காவேரி நகர், கரூர் பைபாஸ் சாலையோரத்தில காவிரி கரையில் மக்கள் தர்ப்பணம் கொடுத்தனர்.

தஞ்சை:  இதே போல் தஞ்சை மாவட்டம் திருவையாறு புஷ்ப மண்டப படித்துறையில் அமாவாசையன்று முன்னோர்களுக்கு தர்ப்பணம், திதி, பிதுர்பூஜை செய்ய வெளியூர், உள்ளூரில் இருந்து 10 ஆயிரம் பேர் வந்து செல்வர். இந்நிலையில் கொரோனா தொற்று காரணமாக திருவையாறு படித்துறையிலும் தர்ப்பணம் கொடுக்க தடை விதிக்கப்பட்டது. திருவையாறு சரகத்தில் உள்ள 6 ஆற்று வழிகளும் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. தர்ப்பணம் கொடுக்க வந்த மக்கள் காவிரியின் வடகரையில் 15ம் மண்டப தெருவில் நெல்லிக்காய் படித்துறையிலும், தென்கரை பகுதியான நடுப்படுகை காவிரி கரையிலும் திதி கொடுத்தனர்.

நாகை: நாகை கடற்கரை, வேதாரண்யம் அருகே கோடியக்கரை கடலில், வேதாரண்யம் சன்னதி கடல், பூம்புகார் கடற்கரைகளில் ஏராளமான மக்கள் நீராடி தர்ப்பணம் கொடுப்பது வழக்கம். கடற்கரைக்கு மக்கள் வர தளர்வு அளிக்கப்பட்டிருந்தது. நாகையில் 40 புரோகிதர்கள் வரும் நிலையில், நேற்று 10 பேர் மட்டுமே இருந்தனர். குறைந்த எண்ணிக்கையிலான மக்களே வந்து தர்ப்பணம் கொடுத்தனர். இதேபோல் வேதாரண்யம் கடற்கரைக்கும் திதி கொடுக்க மக்கள் வராததால் கடற்கரைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

திருவாரூர்: திருவாரூர் கமலாலய குளத்திலும் மக்கள் அதிகளவில் கூடுவர். இதனால் குளத்தின் கேட் பூட்டப்பட்டு தடைவிதிக்கப்பட்டிருந்தது. ஆனாலும் தடையை மீறி மேலகோபுரம் மேல்கரை பகுதியில் குளத்தின் கம்பிவேலி மீது ஏறி குதித்து சென்று ஏராளமான ஆண்கள், பெண்கள் புரோகிதர்கள் மூலம் தர்ப்பணம் கொடுத்தனர்.

புதுக்கோட்டை: புதுக்கோட்டை பல்லவன் குளத்தில் மக்கள் திரண்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பார்கள். இதனால் பல்லவன் குளம் நுழைவாயில் பூட்டப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அங்கு வந்த மக்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனால் குளக்கரை வெறிச்சோடியது.

கொரோனா காரணமாக நீர் நிலைகளில் மக்கள் திரள தடைவிதிக்கப்பட்டதால் மக்கள் ஆங்காங்கே காவிரி கரைகளில் புரோகிதர்கள் இன்றி தர்ப்பணம் கொடுத்தனர். பெரும்பாலானோர் வீடுகளிலே முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்ததால் புரட்டாசி மகாளய அமாவாசை களையிழந்து காணப்பட்டன.

Related Stories: