புரட்டாசி அமாவாசையை முன்னிட்டு ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் வேள்வி பூஜை: ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

மதுராந்தகம்: மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு வேள்வி பூஜை நடந்தது. மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் புரட்டாசி மாத மகாளய அமாவாசையை முன்னிட்டு, நேற்று வேள்வி பூஜை நடந்தது. மகாளய அமாவாசையையொட்டி, மக்களை வாட்டி வரும் கொரோனாவில் இருந்து உலக மக்கள் விடுபட்டு, மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டும். மக்கள் அமைதி பெற்று நிம்மதியுடன் வாழ வேண்டும். முன்னோர்களின் ஆன்மா சாந்தி அடைய வேண்டும். இயற்கை வளம் பெற வேண்டும் என சங்கல்பம் செய்து சித்தர் பீடத்தில், பங்காரு அடிகளார் எண்கோண வடிவத்தில் அமைக்கப்பட்ட பெரிய யாக குண்டத்தில் கற்பூரம் ஏற்றி பூஜையை தொடங்கி வைத்தார்.

இதை தொடர்ந்து பக்தர்கள் நவதானியங்களையும், நவ சமித்து குச்சிகளையும், காய்கறிகள் தானிய வகைகளையும் யாகத்தில் இட்டு அம்மனை வழிபட்டனர். பக்தர்கள் அரசு விதிகளின்படி சனிடைசர் மூலம் கைகளை கழுவி சுத்தம் செய்து, முககவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் வந்து செல்ல, ஆதிபராசக்தி ஆன்மிக  இயக்கத்தினர் ஏற்பாடுகளை செய்தனர். இதில், ஆதிபராசக்தி  அறநிலைய  தலைவர் லட்சுமி பங்காரு அடிகளார், ஆதிபராசக்தி மருத்துவமனை மேலாண் இயக்குனர் டி.ரமேஷ், அறநிலைய அறங்காவலர் உமாதேவி, ஜெய்கணேஷ் பாராமெடிக்கல் தாளாளர் டாக்டர் லேகா செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஆதிபராசக்தி ஆன்மிக இயக்க கடலூர் மாவட்ட நிர்வாகிகள் செய்தனர்.

Related Stories: