சிறப்பு விமானத்தில் 913 பேர் சென்னை வருகை 629 இந்தியர்கள் வெளிநாடு பயணம்

சென்னை: வெளிநாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்கள் 913 பேர் 10 சிறப்பு மீட்பு விமானங்களில் சென்னை வந்தனர். அதேபோல், 629 இந்தியர்கள் சிறப்பு அனுமதி பெற்று 6 தனி விமானங்களில் சென்னையிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்றனர். கொரோனா வைரஸ் ஊரடங்கால் வெளிநாடுகளில் சிக்கித்தவிக்கும் இந்தியர்கள் வந்தே பாரத் சிறப்பு மீட்பு விமானங்களில் இந்தியா அழைத்து வரப்படுகின்றனர். அவ்வாறு அமெரிக்கா, துபாய், குவைத், அபுதாபி, சார்ஜா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் சிக்கித்தவித்த இந்தியர்கள் 913 பேர் 10 சிறப்பு மீட்பு விமானங்களில் சென்னை அழைத்து வரப்பட்டனர்.

இவர்கள் அனைவருக்கும் குடியுரிமை, சுங்கச் சோதனைகள் நடத்தப்பட்டன. பின்பு மருத்துவ குழுவினர் அவர்களுக்கு சோதனை நடத்தினர். இவர்களில் 700க்கும் மேற்பட்டவர்கள் வெளிநாடுகளிலேயே மருத்துவ பரிசோதனைகள் செய்து சான்றிதழ்களுடன் வந்திருந்தனர். அவர்களுக்கு கைகளில் ரப்பர் ஸ்டாம்பு முத்திரைகளிட்டு, அவரவர் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்துதலுக்கு அனுப்பி வைத்தனர். மற்றவர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வீடுகளுக்கு தனிமைப்படுத்த அனுப்பினர்.

மேலும், சென்னையிலிருந்து 629 இந்தியர்கள் அமெரிக்கா, பாரீஸ், துபாய், அபுதாபி ஆகிய நாடுகளுக்கு 6 சிறப்பு தனி விமானங்களில் புறப்பட்டு சென்றனர். இவர்களில் பலர் வெளிநாட்டு குடியுரிமை பெற்ற என்ஆர்ஐ மற்றும் வெளிநாடுகளில் கார்பரேட் நிறுவனங்களில் பணியாற்றும் இந்தியர்கள். இவர்கள் மத்திய அரசின் சிறப்பு அனுமதி மற்றும் அந்தந்த நாடுகளில் உள்ள இந்திய தூதரகங்களின் அனுமதி பெற்று சென்றனர். சென்னை சர்வதேச விமானநிலையத்தில் ஒரே நாளில் 16 சிறப்பு மீட்பு தனி விமானங்களில் 1,542 இந்தியர்கள் பயணித்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: