கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நீர் இன்று திறப்பு: 4 நாட்களில் தமிழக எல்லைக்கு வரும்

சென்னை: கண்டலேறு அணையில் இருந்து தமிழகத்துக்கு கிருஷ்ணா நீர் இன்று திறக்கப்படுகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தெலுங்கு கங்கா திட்ட ஒப்பந்தப்படி ஆந்திர அரசு கண்டலேறு அணையில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 12 டிஎம்சி நீர் தமிழகத்தில் தரவேண்டும். இந்த நிலையில் தெலுங்கு கங்கா திட்ட தொழில்நுட்ப வல்லுநர் குழு கூட்டம் கடந்த மாதம் 29ம் தேதி திருப்பதியில் நடந்தது. இந்த கூட்டத்தில் சென்னை மாநகரின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு கண்டலேறு அணையிலிருந்து தண்ணீர் திறக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

இதற்கு ஆந்திர அரசு சார்பில் செப்டம்பர் 14ம் தேதி முதல் தண்ணீர் தமிழகத்திற்கு தரப்படும் அல்லது கண்டலேறு அணையில் 30 டிஎம்சி எட்டியவுடன் தண்ணீர் தரப்படும் என்று ஆந்திர அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிலையில் கடந்த 10ம் தேதி கண்டலேறு அணை 30 டிஎம்சியை எட்டியது. இதை தொடர்ந்து தமிழக அதிகாரிகள் சார்பில் தண்ணீர் திறப்பது தொடர்பாக ஆந்திர அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், ஆந்திர நீர்வளப்பிரிவு அதிகாரிகள், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி மற்றும் நீர்வளத்துறை அமைச்சரிடம் கேட்டு தண்ணீர் திறப்பதாக தெரிவித்தனர். இதனால், தமிழகத்துக்கு தண்ணீர் திறந்து விடுவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்த நிலையில், முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க அனுமதி அளித்து உத்தரவிட்டார். அதன்பேரில், கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நீர் இன்று தமிழகத்துக்கு திறக்கப்படுகிறது. இதற்காக, கிருஷ்ணா நீர் திட்ட செயற்பொறியாளர் ஜார்ஜ் ஆந்திரா சென்றுள்ளார். இன்று காலை 9 மணியளவில் கண்டலேறு அணையில் இருந்து 500 கனஅடி வீதம் தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது. தொடர்ந்து, இந்த நீர் திறப்பு படிப்படியாக 2 ஆயிரம் கன அடி வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இன்று திறக்கப்படும் தண்ணீர் 4 நாட்களில் தமிழக எல்லையான ஊத்துக்கோட்டை ஜூரோ பாயிண்ட்டிற்கு வந்தடைகிறது. இந்த தவணை காலத்தில் 4 டிஎம்சி நீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Related Stories: