நிதி முறைகேடுகளில் ஈடுபடும் நிர்வாக சபையை கலைத்து இடைக்கால செயலாட்சியரை நியமிக்க பதிவாளருக்கு அதிகாரம்: மசோதா நிறைவேறியது

சென்னை: நிதி முறைகேடுகளில் ஈடுபடும் நிர்வாக சபையை கலைத்து இடைக்கால செயலாட்சியரை நியமிக்க பதிவாளருக்கு அதிகாரம் அளித்து சட்டப்பேரவையில் ஒருமனதாக மசோதா நிறைவேற்றப்பட்டன. இது குறித்து சட்டப்பேரவையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தாக்கல் செய்த சட்டமுன்வடிவில் கூறியிருப்பதாவது: 1983ம் ஆண்டு தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தின் 88வது பிரிவில் (1) ம் உட்பிரிவானது கூட்டுறவு சங்கத்தின் நிர்வாக சபையை கலைப்பதற்காகவும் சங்கத்தின் அலுவல்களை நிர்வகிப்பதற்காகவும் அதில் குறிப்பிடப்பட்ட காரணங்களுக்காக, ஆறு மாதங்களுக்கு மிகாத கால அளவிற்கு செயலாட்சியர் ஒருவரை பணியமர்த்துவதற்கு வழிவகை செய்கிறது.

குறித்த சில நேர்வுகளில் பதிவாளரால், நிர்வாக சபை கலைப்பிற்கான அறிவிப்பு வழங்கப்பட்ட உடனேயே. நிர்வாக சபை, நிதி முறைகேடுகள் அல்லது மோசடி அல்லது கையாடல்களில் ஈடுபட்டு கணக்குகளை கையாளுகிறது. அல்லது கணக்கு புத்தகங்களை உள்நோக்கங்களுடன் அழிக்கிறது. அத்தகைய நிகழ்வுகளை தவிர்ப்பதற்காக, நிர்வாக சபை கலைப்பு அறிவிப்பு வெளியான உடனேயே அத்தகைய நிர்வாக சபையை இடைநீக்கம் செய்யவும் சங்கத்தின் அலுவல்களை நிர்வகிக்க இடைக்கால செயலாட்சியரை பணியமர்த்தவும் பதிவாளருக்கு அதிகாரம் வழங்கலாம் எனவும், மேற்கண்ட அறிவிப்பு வெளியான நாளிலிருந்து இரண்டு மாதங்கள் காலத்திற்குள் அதனை பின்பற்றி ஓர் ஆணை வழங்கப்படுதல் வேண்டும் எனவும் அரசானது முடிவு செய்துள்ளது. எனவே, மேற்சொன்ன நோக்கத்திற்காக, கூறப்பட்ட தமிழ்நாடு கூட்டுறவு சங்கங்கள் சட்டத்தை மேலும் திருத்தம் செய்வதென அரசு முடிவு செய்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Related Stories: