காதல் விவகாரத்தில் நாகாலாந்தில் இருந்து வீட்டை விட்டு வெளியேறிய சிறுவர்கள் மீட்பு: உறவினர்களிடம் குழந்தைகள் நல குழுமத்தினர் ஒப்படைத்தனர்

செங்கல்பட்டு: ஸ்ரீபெரும்புதூர் அருகே கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு சிறுவன், சிறுமி சுற்றி திரிந்தனர். இதையறிந்த ஸ்ரீபெரும்புதூர் போலீசார், அவர்களை மீட்டு விசாரித்தனர். அதில், நாகாலாந்தை சேர்ந்த 16 வயது சிறுவன், 15 வயது சிறுமி, காதல் விவகாரத்தில் வீட்டை விட்டு வெளியேறியது தெரிந்தது. இதையடுத்து போலீசார், அவர்களை செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் நல குழுமத்திடம் ஒப்படைத்தனர். இதற்கிடையில், கொரோனா ஊரடங்கு காரணமாக அவர்களை, சொந்த ஊருக்கு அனுப்ப முடியாமல் ஆனது.

இதையொட்டி, சிறுவனை செங்கல்பட்டு அடுத்த ஆத்தூர் அரசு காப்பகத்திலும், சிறுமியை அன்னை சத்யா பெண்கள் காப்பகத்திலும் ஒப்படைத்தனர். இந்நிலையில் கொரோனா ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டு, ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதைதொடர்ந்து, 2 பேரையும் சொந்த மாநிலத்துக்கு அனுப்ப, அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி, சிறுவர்கள் மீட்கப்பட்டதை, நாகாலாந்து போலீசாருக்கு தகவல் தெரியப்படுத்தினர். அதன்படி நேற்று காலை செங்கல்பட்டு வந்த நாகலாந்து போலீசார் மற்றும் சிறுவர்களின் உறவினர்களிடம், அவர்களை ஒப்படைத்தனர்.

Related Stories: