திருப்போரூர் எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரியில் ஒப்பந்த ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டம்: திடீரென பணி நீக்கம் செய்ததால் ஆத்திரம்

திருப்போரூர்: திருப்போரூர் அடுத்த காலவாக்கத்தில் எஸ்எஸ்என் பொறியியல் கல்லூரி உள்ளது. இங்கு தோட்ட வேலை, குடிநீர், மின்சாரம், ஏசி, கழிவுநீர் சுத்திகரிப்பு, வாகன ஓட்டுனர்கள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் 120 பெண்கள் உள்பட 400க்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல் ஒப்பந்த பணியாளர்கள் வேலைக்கு வந்தனர். அதில், 28 பேரை பாதுகாவலர்கள் உள்ளே விட மறுத்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள், ஏன் எங்களை உள்ளே அனுப்ப மறுக்கிறீர்கள் என்று கேட்டனர். அதற்கு கல்லூரி நிர்வாகம் உங்களை வேலையில் இருந்து நீக்கி விட்டது. அதனால், உள்ளே அனுமதிக்க முடியாது என கூறியுள்ளனர்.

இந்த தகவல், கல்லூரியில் பணியாற்றிக் கொண்டிருந்த அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும் தெரிய வந்தது. இதையடுத்து 200க்கும் மேற்பட்டோர், தங்களது பணியை புறக்கணித்து கல்லூரி வாயிலின் உள்ளே சாமியானா பந்தல் அமைத்தனர். பின்னர், அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும்., யாரையும் வேலையை விட்டு நீக்கம் செய்யக்கூடாது என கூறி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால், கல்லூரி நிர்வாகம் சார்பில் யாரும் எவ்வித பேச்சுவார்த்தை யும் நடத்தவில்லை. ஆனாலும், மாலை 3 மணி வரை போராட்டம் நீடித்தது. இதனால் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் செல்லும் கார் போன்ற வாகனங்கள் வெளியே செல்ல முடியாமல் சிக்கின.

தகவலறிந்து திருப்போரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். ஆனால் போராட்டக்குழுவினர் உறுதியாக இருந்ததால் ஊழியர்களும், பேராசிரியர்களும் வேறு வழியில் வெளியேற்றப்பட்டனர். பின்னர், நீண்ட நேரத்துக்கு பிறகு, வேலையை விட்டு நீக்கப்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் அனைவருக்கும் வேலை வழங்க ஒப்புதல் பெற்று அறிவிப்பதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்தது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.

Related Stories: