ஜெயலலிதா இல்லத்தை நினைவிடமாக்கும் விவகாரம்: ஆளுநர் செயலாளர் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையத்தை அரசுடமைக்கி மே 22ம் தேதி  அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதற்கு ஆளுநர் ஒப்பதல் வழங்கியுள்ளார். இதனை எதிர்த்து ஜெயலலிதாவின் அண்ணன் மகன் ஜெ.தீபக் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், வேதா நிலையம் அமைந்துள்ள நிலம் எனது பாட்டி சந்தியாவால் வாங்கப்பட்டது. தனிநபர் சொத்துக்களை கையகப்படுத்துவது தொடர்பாக அவசர சட்டம் பிறப்பிக்க ஆளுநருக்கு அதிகாரமில்லை, ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசுகள் குறித்த  உண்மை நிலையை தெரிந்து கொள்ளாமல் அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது, என குற்றம் சாட்டியுள்ளார்.

 எனவே, வேதா நிலையத்தை அரசுடமையாக்கப்பட்டு பிறப்பிக்கப்பட்ட அவசர சட்டத்தை செல்லாது என அறிவிக்க வேண்டும் எனவும் நினைவில்லமாக மாற்ற தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசு தரப்பில் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி, அவசர சட்டத்துக்கு மாற்றாக சட்ட முன்வடிவு சட்டமன்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.  இதையடுத்து வழக்கு குறித்து, ஆளுநரின் செயலாளர், தகவல் மற்றும் மக்கள் தொடர்பு துறை செயலாளர் மற்றும் இயக்குனர், தமிழக சட்ட துறை செயலாளர் ஆகியோர் 6 வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.

Related Stories: