நாகர்கோவில் மாநகரில் செயல் இழந்த கண்காணிப்பு கேமராக்களை சரி செய்யும் பணி தொடக்கம்: கட்டுப்பாட்டு அறைகளை செயல்படுத்த கோரிக்கை

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகரில் செயல் இழந்த நிலையில் கிடந்த கண்காணிப்பு கேமராக்களை  சரி செய்யும் பணிகள் தொடங்கி உள்ளன. திருட்டுகள், செயின் பறிப்புகள், கொலை உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் காவல்துறையினர் துப்பு துலக்க கண்காணிப்பு கேமராக்கள் பேருதவியாக உள்ளன. காவல் துறையை பொருத்தமட்டில் கண்காணிப்பு கேமராக்கள் மூன்றாவது கண் என கருதப்படுகிறது. இதனால் வீடுகள், குடியிருப்பு பகுதிகள், வங்கிகள், மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள், பள்ளி, கல்லூரி கட்டிடங்கள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட வேண்டும் என்று காவல்துறையினர் வலியுறுத்தி வருகிறார்கள்.

காவல்துறை சார்பிலும் முக்கிய சந்திப்புகள், பஸ் நிலையங்கள், சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்திலும் கண்காணிப்பு கேமராக்கள் அதிகளவில் பொருத்தப்பட்டு உள்ளன. குறிப்பாக நாகர்கோவில் மாநகரம் கண்காணிப்பு கேமராக்களால் சூழப்பட்டுள்ளன. வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம், மீனாட்சிபுரம் அண்ணா பஸ் நிலையம், மணிமேடை, செட்டிக்குளம், கோட்டார், மீனாட்சிபுரம் அவ்வை சண்முகம் சாலை, கலெக்டர் அலுவலக சந்திப்பு, பார்வதிபுரம் என நகரெங்கும் முக்கிய பகுதிகளில் சுமார் 200 கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டன. பின்னர் மாவட்டத்தின் பல இடங்களிலும் இவை விரிவுப்படுத்தப்பட்டது.

ஒட்டு மொத்த கேமராக்களையும் கண்காணிக்கும் வகையில் எஸ்.பி. அலுவலகத்தில்  சிறப்பு கட்டுப்பாட்டு அறையும் அமைக்கப்பட்டுள்ளன.  இவ்வாறு பல்வேறு சிறப்பம்சங்களுடன் உருவாக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் செயல் இழந்த நிலையில் உள்ளன. நாகர்கோவில் மாநகரில் தற்போது குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை திட்ட பணிகளால் பல இடங்களில் கேமராக்களின் ஒயர்கள் துண்டிக்கப்பட்டன. இதனால் கேமராக்கள் வெறும் காட்சி பொருளாக உள்ளன.

குறிப்பாக வடசேரி பஸ் நிலையம், அண்ணா பஸ் நிலையங்களில் கூட கேமிராக்கள் முறையாக இயங்காமல் உள்ளன. வடசேரி பஸ் நிலையத்தில் பொருத்தப்பட்டுள்ள பல கேமராக்கள், தலைகீழான நிலையில் உள்ளன.

குற்ற செயல்கள் எங்கு நடந்தாலும் அதை கண்டுபிடிக்கும் வகையில் கேமராக்கள் இயங்கின. இப்போது இவை செயல் இழந்து கிடப்பது, குற்றவாளிகளுக்கு சாதகமாக அமைந்து உள்ளது. எனவே மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உடனடியாக இதில் நடவடிக்கை மேற்கொண்டு கேமராக்கள் முழுமையாக இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர். தற்போது இந்த கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்கும் பணிகள் நடக்கின்றன. நாகர்கோவிலில் கோட்டார் காவல் நிலையம் எதிரில் செயல்படாமல் இருந்த கண்காணிப்பு கேமராக்களை நேற்று சரி செய்யும் பணிகள் நடந்தன.

இன்னும் சில தினங்களில், நகரெங்கும் உள்ள கேமராக்கள் சீரமைக்கப்பட்டு, முழு அளவில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்தனர். வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள கேமராக்களின் காட்சிகளை பதிவு செய்ய வடசேரி பஸ் நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் கட்டுப்பாட்டு அறை இருந்தது. தற்போது இந்த கட்டுப்பாட்டு அறையும் போலீஸ் யாரும் இல்லாத நிலையில் உள்ளது. ஆங்காங்கே ஒயர்களும் அறுந்து கிடக்கின்றன. நாகர்கோவில் மாநகரில் பொருத்தப்பட்டுள்ள கேமராக்கள் அனைத்தும் அதிக ஹைஜெனிக் திறன் கொண்டவையாக செயல்படும் என கூறினர். மழை நேரங்களிலும், இரவு நேரங்களிலும் காட்சிகளை பதிவு செய்பவை ஆகும்.

இதற்கான கட்டுப்பாட்டு அறை, வடசேரி பஸ் நிலையத்தில் இயங்கும் என்றனர். ஆனால் அந்த கட்டுப்பாட்டு அறையை இப்போது பார்ப்பதற்கே மிகவும் பரிதாபகரமாக உ்ளளது. வடசேரி சந்திப்பு பகுதி வழியாக ஏராளமான கனரக வாகனங்கள் செல்கின்றன. குறிப்பாக கேரளாவுக்கு இந்த வழியாக அதிகளவி–்ல வாகனங்கள் செல்கின்றன. இதை கண்காணிக்கும் வகையில் கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. எனவே கேமராக்களுடன், கட்டுப்பாட்டு அறையையும் சீரமைத்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

Related Stories: