சாலையை தரமாக அமைக்கக் கோரி லாரியை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்

எட்டயபுரம்: எட்டயபுரம் அருகே சாலையை தரமாக அமைக்கக் கோரி கிராம மக்கள் லாரியை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். எட்டயபுரம் அருகே உள்ள ஈராச்சி விலக்கில் இருந்து டி.சண்முகாபுரம் வரையிலான 5 கிலோ மீட்டர் நீளமுள்ள சாலை வடக்கு செமப்புதூர், தெற்கு செமப்புதூர், அஞ்சுரான்பட்டி கிராமங்கள் வழியாக செல்கிறது. சாலை புதுப்பிக்கும் பணி கடந்த சில தினங்களாக நடந்து வருகிறது. பழைய சாலையில் உள்ள கற்கள் பெயர்க்கப்பட்டு புதிய ஜல்லிக்கற்கள் பரப்பும் பணி நடந்து வரும் நிலையில் ஒப்பந்த விதிமுறைப்படி சாலை அமைக்கப்படவில்லை என்று கூறி நேற்று அவ்வழியாக சாலைப்பணிக்காக கிரசர் பொடி ஏற்றி வந்த லாரியை தெற்கு செமப்புதூர் கிராம மக்கள் சிறைபிடித்தனர்.

மேலும் முறைகேடாக அமைக்கும் பணியை சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் பார்வையிட வேண்டும், ஒப்பந்த விதிகளின்படி சாலை அமைக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கையும் விடுத்தனர். இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், ரூ.2 கோடியே 70 லட்சம் மதிப்பீட்டில் நெடுஞ்சாலை துறை ஒப்பந்தம் மூலம் அமைக்கப்படும் இந்த சாலை ஒப்பந்த விதிமுறைகள் குறித்து தகவல் பலகை வைக்கப்படவில்லை, மேலும் சாலை 15 செ.மீ கனத்தில் ஜல்லி மற்றும் வெட்மிக்ஸ் கலந்து பரப்ப வேண்டும், அதன் பின்னர் ரோலர் இயந்திரம் மூலம் ஜல்லிக்கற்களை சமப்படுத்திவிட்டே தார் சாலை அமைக்க வேண்டும்.

ஆனால் சாலையை ஒப்பந்ததாரரர்கள் அவசர கதியில் சராசரி 4 செ.மீ கனத்தில் ஒருகல் வீதம் வெடமிக்ஸ் கலக்காமல் பரப்பிவிட்டு அதன்மீது ஈரம் இல்லாத கிரசர் பொடியை பரப்ப முயற்சிக்கின்றனர். இதனால் சாலை அமைத்த ஒரு சில மாதங்களிலேயே சேதமடைந்து விடும். சாலை பணியை நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் யாரும் வந்து பார்வையிடவில்லை. பலமுறை நெடுஞ்சாலை துறை பொறியாளருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு தெரிவித்தும் அவர் கண்டு கொள்ளவில்லை’ என்றனர். இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் தரமான சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து பொதுமக்கள் லாரியை விடுவித்து கலைந்து சென்றனர்.

Related Stories: