மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த விவகாரம்: மின் பொறியாளர் உள்பட 2 பேர் சஸ்பெண்ட்: மாநகராட்சி நடவடிக்கை

பெரம்பூர்: மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த விவகாரத்தில், மின் பொறியாளர் உள்பட 2 பேரை சஸ்பெண்ட் செய்து மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. சென்னை பெரியார் நகர் ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்தவர் அலிமா (35). இவரது கணவர் ஷேக் அப்துல். தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். புளியந்தோப்பு நாராயண சுவாமி தெருவில் அலிமா வீட்டு வேலை செய்து வந்தார்.  வழக்கம்போல், நேற்று முன்தினம் காலை 9.30 மணிக்கு நாராயண சுவாமி தெரு வழியாக அலிமா வேலைக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, தெருவில் மழைநீர் தேங்கி இருந்ததால், ஓரமாக நடந்து சென்றபோது, பூமிக்கு அடியில் பதித்து இருந்த மின் கேபிளில் மின் கசிவு ஏற்பட்டதால், அலிமா மீது மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.

இந்த பகுதியில் உள்ள மின் கேபிள் சேதமடைந்து, கடந்த 15 நாட்களாக மின் கசிவு ஏற்பட்டதால், அவ்வழியே சென்ற சிறுமி உள்பட 3 பேர் மீது மின்சாரம் பாய்ந்துள்ளது. இதுபற்றி அப்பகுதி மக்கள் பலமுறை மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்களுக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. இந்நிலையில், அதே பகுதியில் மின்சாரம் பாய்ந்து இளம்பெண் இறந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதிகாரிகள் அலட்சியமே இந்த உயிரிழப்புக்கு காரணம் என குற்றம்சாட்டினர்.  இந்நிலையில், நேற்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், புளியந்தோப்பு பகுதியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவத்தில் அலட்சியமாக செயல்பட்ட புளியந்தோப்பு உதவி கோட்ட மின் பொறியாளர் கண்ணன் மற்றும் இளநிலை பொறியாளர் வெங்கடராமன் ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகின்றனர், என கூறப்பட்டுள்ளது.

மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

புளியந்தோப்பு பகுதியில் மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ள மாநில மனித உரிமை ஆணையம், இந்த விவகாரம் தொடர்காக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனர் ஆகியோர் 2 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.

Related Stories: