மத்திய அரசு வழிகாட்டுதல்படி காசநோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை: சுகாதாரத்துறை முடிவு

சென்னை: மத்திய அரசு காசநோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்வது தொடர்பான வழிமுறைகளை சில நாட்களுக்கு முன்பு வெளியிட்டது. நோய் அறிகுறி உள்ள காசநோயாளிகள், சிகிச்சையில் உள்ள காசநோயாளிகள் உள்ளிட்ட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். குறிப்பாக 2 வாரங்களுக்கு மேல் இருமல், 2 வாரங்களுக்கு மேல் தொடர்ந்து காய்ச்சல், எடை இழப்பு உள்ளிட்ட அறிகுறி உள்ளவர்களுக்கு கட்டாயம் சோதனை செய்ய வேண்டும்.

இதன்பிறகு காசநோய்- கொரோனா ஆகிய இரு நோயால் பாதிக்கப்பட்டவர்களை தனியாக கண்டறிந்து கோவிட் தனிமைப்படுத்தும் மையங்களில் காசநோய் சிகிச்சை மற்றும் கொரோனா சிகிச்சைகள் வழங்க வேண்டும். இதன்படி தமிழகத்தில் அறிகுறி உள்ள காசநோயாளிகளுக்கு கொரோனா பரிசோதனை செய்ய சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது.

இதுதொடர்பாக, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது வரை 52 ஆயிரத்து 489 காச நோயாளிகளுக்கு சிகிச்சை காலம் முழுவதற்கும் தேவைப்படும் காசநோய் மருந்துகள் காசநோய் களப்பணியாளர்கள் மூலம் வீடுகளுக்கே சென்று வழங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கண்காணிப்பின் மூலம் தொலைபேசி மூலம் பல்வேறு சிகிச்சை முறைகள் வழங்கப்பட்டுவருகிறது. வீடுகளுக்கு மருந்து கொண்டு செல்லும் களப்பணியாளர்கள் காசநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதாவது அறிகுறி உள்ளதா என கேட்பார்கள். இதனை தொடர்ந்து நடமாடும் வாகனம் மூலம் வீடுகளுக்கு சென்றே சளி மாதிரி சேகரிக்கப்பட்டு சோதனை செய்யப்படுகிறது.

Related Stories: