நடப்பு நிதியாண்டு நிலவரம் தமிழகத்துக்கு முதல் காலாண்டில் ரூ.19 ஆயிரம் கோடி பற்றாக்குறை: கடன் வாங்குவது 117 % உயர்வு; சிஏஜி அறிக்கையில் தகவல்

சென்னை: தமிழகத்தின் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 19 ஆயிரம் கோடி ரூபாய் நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக கணக்கு தணிக்கைத் துறையின் தற்காலிக அறிவிக்கை தெரிவிக்கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக தொழில் முடக்கம் ஏற்பட்டிருந்ததால் தமிழகத்தின் வருவாய் குறையத் தொடங்கியது. ஜூன் கடைசி வாரத்தில் பேசிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனி்சாமி, ‘நிலைமை இப்படியே தொடர்ந்தால் நடப்பு நிதியாண்டின் நிதி பற்றாக்குறை 85 ஆயிரம் கோடியை எட்டக்கூடும். இப்போது நிதித்துறையின் மதிப்பீடு, பட்ஜெட் மதிப்பீடுகளின் அடிப்படையில் பார்க்கும் போது பற்றாக்குறை 35 ஆயிரம் கோடி ரூபாயாக இருக்கும்,’ என்று கூறியிருந்தார்.

ஆனால் நடப்பு நிதியாண்டில், ஏப்ரல் முதல் ஜூன் மாதல் வரையிலான முதல் காலாண்டின் நிதி பற்றாக்குறை 19,228 கோடி ரூபாயாக இருக்கும் என்று கணக்கு தணிக்கைத் துறையின் தற்காலிக அறிக்கை கூறுகிறது. திமுக எம்எல்ஏ பழனிவேல் தியாகராஜன் கூற்றுப்படி, ‘ நடப்பு நிதியாண்டு முடிவடையும் போது நிதி பற்றாக்குறை ஒரு லட்சம் கோடியாக உயர்ந்தாலும்’ ஆச்சர்யப்படுவதற்கில்லை. மதுபான விற்பனை மூலம் ஏற்பட்ட வருவாயும் முதல் காலாண்டில்  குறைந்துள்ளது. தமிழகத்தின் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டின் திட்ட மதிப்பீடு 59,346 கோடியாகும்.

அதில் 32.4சதவீதம் அதாவது 19,228 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நடப்பு காலாண்டில் கடன்களை தவிர்த்து வரி, முத்திரைக்கட்டணம், மூலதனம் என பல்வேறு வகைகளின் மூலம் கிடைத்த வருவாய் 29,322 கோடி ரூபாயாக உள்ளது. இது இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 2,24,739கோடி ரூபாயில் வெறும் 13.04 மூலதனம் தவிர்த்து நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டு வருமானம் 29,412.51கோடியாகும். இது கடந்த 2019-20 நிதியாண்டின் முதல் காலாண்டில் 38,053 கோடியாக இருந்தது. அதாவது இந்த ஆண்டு 23.2சதவீத வருவாய் குறைந்துள்ளது.

மாநிலத்தில் சொந்த வரி வருவாய், முத்திரை கட்டணங்கள், மது விற்பனை, பெட்ரோல், டீசல் மீதான விற்பனை வரி வருவாய் போன்றவை கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 23000.22 கோடி ரூபாயாக இருந்தது. இந்த நிதியாண்டின் காலாண்டில் 11,755.24 கோடியாக குறைந்துள்ளது. அதே நேரத்தில் மத்திய அரசின் மானியம், நிதி உதவி ஆகியவை ஆச்சர்யப்படத்தக்க வகையில் நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் 10,918.67கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. ஜிஎஸ்டி உள்ளிட்ட வரிகளில் தமிழக அரசின் பங்கு இந்த காலாண்டில் 4,446.35கோடியாக குறைந்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் முதல் காலாண்டில் 5,976 கோடியாக உயர்ந்துள்ளது.

இதெல்லாம் தமிழக அரசின் கடன்களை கணக்கில் கொள்ளாமல் கணக்கீடு செய்யப்பட்டவை. .ஏப்ரல் முதல் ஜூன் வரை முதல் காலாண்டில் தமிழக அரசு 46ஆயிரம் கோடி கடன் வாங்கியுள்ளது. கடந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் 21,190கோடி ரூபாய் மட்டுமே கடன் வாங்கப்பட்டது. 117 சதவீதம் கடன் தொகை அதிகரித்துள்ளது. பற்றாக்குறையும், செலவினங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழக நிதி அமைச்சர் பன்னீர்செல்வம், துணை நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார். அதில் நிதி பற்றாக்குறை துல்லியமாக வெளியாகலாம். கூடவே செலவினங்களை, பற்றாக்குறையை  தமிழக அரசு எப்படி சமாளிக்கப் போகிறது என்பது தெரியவரும்.

Related Stories: