நீட் தேர்வை கண்டித்து பேரவையை முற்றுகையிட முயன்ற 50 பேர் மீது வழக்கு

சென்னை: நீட் தேர்வை கண்டித்த சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த 50 பேர் மீது எழும்பூர் போலீசார் 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். நீட் தேர்வை ரத்து செய்ய கோரி தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் சட்டப்பேரவை நடைபெறும் கலைவாணர் அரங்கை முற்றுகை போராட்டம் நடத்தப்படும் என்று அக்கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிவித்திருந்தார். அதை தொடாந்து கலைவாணர் அரங்கம் அருகே பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. பின்னர் திட்டமிட்டப்படி நேற்று காலை எழும்பூர் எல்.ஜி. ரவுண்டனா அருகே தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வேணுகோபால் தலைமையில் 50 பேர் ஒன்று கூடினர்.

அப்போது நீட் தேர்வை ரத்து செய்ய கோரி மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். பின்னர் அனைவரும் பேரணியாக சட்டப்பேரவை நடைபெறும் கலைவாணர் அரங்கம் அருகே புறப்பட்டனர். ஆனால் போலீசார் அனைவரையும் தடுத்து நிறுத்தினர். அதைதொடர்ந்து தங்களது போராட்டத்தை கைவிட்டு அனைவரும் திரும்பி சென்றனர். போலீசாரின் தடையை மீறி முற்றுகை போராட்டம் நடத்த முயன்ற தமிழக வாழ்வுரிமை கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் வேணுகோபால் உட்பட 50 பேர் மீது எழும்பூர் போலீசார் 144 தடையை மீறியது, 5 பேருக்கு மேல் ஒன்று கூடியது உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: