நடுக்கடலில் மீன்பிடித்த போது மாயமான 10 மீனவர்கள் மியான்மரில் தஞ்சம்: மீட்க அதிகாரிகள் விரைவு

தண்டையார்பேட்டை: காசிமேடு நாவூரார் தோட்டம் பகுதியை சேர்ந்த பாலாஜி என்பவருக்கு சொந்தமான விசை படகில், திருவொற்றியூர் குப்பம் மற்றும் திருச்சினாங்குப்பம் ஆகிய பகுதிகளை சேர்ந்த லட்சுமணன், சிவக்குமார், பாபு, பார்த்திபன், முருகன், கர்ணன், தேசப்பன், ரகு, மற்றொரு தேசப்பன் உள்ளிட்ட 10 மீனவர்கள் கடந்த மாதம் கடலுக்குள் 70 நாட்டிக்கல் தூரத்தில் மீன்பிடிக்க சென்றனர். 7 நாட்களில் கரைக்கு திரும்ப வேண்டிய மீனவர்கள் 50 நாட்களுக்கு மேலாகியும் திரும்பவில்லை.

இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்களின் குடும்பத்தினர், காசிமேடு மீன்வளத்துறை உதவி இயக்குனர், காசிமேடு மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ஆனால், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் மீனவர்களின் குடும்பத்தினர் மறியல் போராட்டம் நடத்தினர். இந்நிலையில், மாயமான 10 மீனவர்களும் பத்திரமாக மியான்மர் நாட்டில் இருப்பதாக மீன்வளத்துறை அலுவலகத்துக்கு நேற்று தகவல் கிடைத்தது. இதுகுறித்து மீனவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும் மகிழ்ச்சியடைந்தனர். மியான்மரில் உள்ள  மீனவர்களை மீட்டுவர தமிழக மீன்வளத்துறை மற்றும் கடலோர காவல் படையினர் சென்றுள்ளனர்.

Related Stories: